உடல்நிலை ஒத்துழைக்காத போதிலும் பிரசாரத்தை துவக்கிய துரைமுருகன்

Spread the love

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்படும் அமைச்சர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் தன் பிரசாரத்தை துவக்கினார்.

தி.மு.க., பொதுச் செயலராகவும் இருக்கும் துரைமுருகன், வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் 10 முறை, ராணிப்பேட்டை தொகுதியில் இரு முறை என, மொத்தமாக 12 தேர்தல்களில் போட்டியிட்டு, 10 வெற்றி களை பெற்றவர். இந்த தேர்தலில், காட்பாடியில் போட்டியிடுகிறார். சென்னையில் இருந்து ரயிலில் காட்பாடி வந்த அவர், திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக புறப்பட்டு, தன் பிரசாரத்தை நேற்று துவக்கினார். அவரது மகனும் தி.மு.க., – எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் உடன் இருந்தார். உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக அவதிப்படும் துரைமுருகன், முதல் பிரசாரத்திலேயே பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: தற்போது 87 வயதாகும் துரைமுருகனுக்கு வயது முதிர்வு காரணமாக தேர்தலில் போட்டியிட ‘சீட்’ மறுக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தன் செல்வாக்கினால், ‘சீட்’ வாங்கி விட்டார். ஆனால், பிரசார கூட்டத்தில் பழைய நிலையில் பேச முடியவில்லை.சமீப காலமாக, பயணங்களுக்கு காரை தவிர்த்து ரயிலிலேயே பயணிக்கிறார். கோடை காலம் என்பதாலும், தமிழகத்திலேயே வேலுார் அதிகபட்ச வெப்பநிலை கொண்ட பகுதி என்பதாலும், இந்த தேர்தல் பிரசாரம் துரைமுருகனுக்கு சவாலாகவே இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *