தமிழகத்தின் தென்னிந்திய மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், சில ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் முக்கியமான போக்குவரத்து மையமான உக்கடம் பேருந்து நிலையத்தில், இன்று காலை முதிய தம்பதி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து நிலையத்திற்கு வந்த அந்த முதிய தம்பதி, அருகிலுள்ள இடத்திற்கு செல்ல ஆட்டோ ஓட்டுநர்களிடம் வாடகை குறித்து பேசியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மனிதநேயமின்றி அவர்களை ஆட்டோவிலிருந்து கீழே தள்ளி, நடுரோட்டில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. வயதையும், நிலையும் கருத்தில் கொள்ளாமல் நடத்திய இந்த கொடூர தாக்குதல், அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தச் சம்பவத்தை பார்த்த பயணி ஒருவர் தனது கைபேசியில் பதிவு செய்ய முயன்றபோது, ஆட்டோ ஓட்டுநர்கள் அவரையும் மிரட்டியதால், அவர் பயந்து வீடியோ பதிவை பாதியிலேயே நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக கோவையில் சில ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளை மிரட்டி அதிக வாடகை வசூலிப்பது, வாடகை ஒத்துவராத நிலையில் தரக்குறைவாக பேசித் தாக்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இன்று நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்கள் முதியவர்கள் என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்களின் செயல், நேரில் கண்டவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.
“பெற்றோர் வயதில் இருப்பவர்களை இப்படித் தெருவில் வைத்து தாக்குவதா?” என அங்கு கூடிய மக்கள் ஆவேசமடைந்தாலும், ஆட்டோ ஓட்டுநர்களின் மிரட்டலுக்குப் பயந்து பலர் மௌனம் காத்தனர்.
இந்த தாக்குதல் சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே காவல் நிலையம் இருந்தும், மக்கள் அதிகம் கூடும் இந்த பகுதியில் போலீஸ் கண்காணிப்பு இல்லாததே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிரந்தர காவல் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.



Leave a Reply