மதுரை மண்டேலா நகர் திடலில் மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை மஸ்தான்பட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “மார்ச் 1ம் தேதி நடைபெறும் கூட்டணி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு மாநாட்டில் மட்டுமே அவர் கலந்துகொள்வார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடைந்தால் அதையும் திறந்து வைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.
தொடர்ந்து அவர், வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்டது தொடர்பாக சிலர் தவறான புகழ் எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டினார். “வெளிநாடுகளில் பிரச்சினைகள் ஏற்பட்டால் வெளியுறவுத்துறை மூலம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் சிலர் தாங்களே செய்ததாக கூறுவது பொருத்தமற்றது,” என்று தெரிவித்தார்.
மாநில அரசை விமர்சித்த அவர், “தேர்தல் அறிக்கையில் கூறிய பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் குறித்து அறிவித்த வாக்குறுதிகள் செயல்படுத்தப்படவில்லை. தற்போது போராட்டம் நடத்துபவர்களுடன் பேசி சமாளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார்.
திமுக–காங்கிரஸ் கூட்டணியில் உட்கட்டளை குழப்பம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். “டெல்லி பயணங்கள், கூட்டணி குறித்த கருத்து வேறுபாடுகள் உள்ளிட்டவை கூட்டணியில் குழப்பத்தை காட்டுகின்றன,” என்றார்.
மேலும், “தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆட்சியில் பங்குக் கேட்க மாட்டோம் என்று தெளிவாக தெரிவித்துள்ளோம். தேவையற்ற குழப்பங்களை உருவாக்க வேண்டாம்,” என கூறினார்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, மது விற்பனை, போதைப் பொருள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விஷயங்களில் அரசுக்கு திட்டமிட்ட அணுகுமுறை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். “மக்களுக்கு நன்மை செய்யவும், மத்திய அரசின் நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்தவும் மாநில அரசுக்கு தெளிவான எண்ணமோ திட்டமோ இல்லை,” என்றார்.
தேமுதிகவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இறுதியாக, “அதிமுக மற்றும் அதன் தொண்டர்கள் திமுகவை எதிர்ப்பதே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ள நிலையில் அரசியல் நிலவரம் மாறக்கூடும்,” என அவர் கூறினார்.



Leave a Reply