“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற எழுச்சிப் பயணத்தின் போது அதிமுகவுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை நேரடியாகக் கண்டோம் என அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “அதிமுக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும்,” என நம்பிக்கை வெளியிட்டார்.
திமுக–தவெக இடையே தான் போட்டி என நடிகர் விஜய் கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அதை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. தவெகவுடன் எங்களுக்கு எந்த Soft Corner-மும் இல்லை. சில பிரச்சினைகளில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொண்டது மட்டுமே,” என்றார்.
திமுக கூட்டணியில்தான் குழப்பம் நிலவுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். “கூட்டணி ஆட்சி வேண்டுமா, தனி ஆட்சி வேண்டுமா என்ற குழப்பம் திமுகவினரிடையே உள்ளது. ஆனால் அதிமுக கூட்டணி தெளிவாக உள்ளது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சே எழவில்லை,” என்றார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினை விமர்சித்த அவர், “அவரது தந்தை முதலமைச்சராக இருந்ததால் அரசியல் அனுபவமும் ஆதரவுமுடன் வளர்ந்தார். நான் ஒரு விவசாயியாக இருந்து படிப்படியாக உழைப்பின் மூலம் பொதுச்செயலாளர் நிலைக்கு வந்தேன். எங்களின் அரசியல் பயணம் வேறுபட்டது,” என கூறினார்.
நடிகர் விஜயை குறித்தும் கருத்து தெரிவித்த அவர், “திரையில் விஜய் சூப்பர் ஸ்டார் இருக்கலாம்; ஆனால் அரசியலில் அவர் கேள்விக்குறி. எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்தால்தான் கட்சியை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. தவெக இன்னும் ஒரு தேர்தல்கூட சந்திக்கவில்லை. அப்படியிருக்க வாக்கு சதவீதத்தை எப்படி கணிக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “நாங்கள் கூட்டணி அமைத்தால் அடிமை என கூறுகின்றனர். ஆனால் திமுகதான் காங்கிரசின் அடிமை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என மக்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளனர். எழுச்சிப் பயணத்தின் போது மக்களின் ஆதரவை தெளிவாகக் கண்டோம்,” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



Leave a Reply