அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்: மதுரையில் வைரல் போஸ்டர்

Spread the love

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள அஜித், தனது நடிப்பு மட்டுமல்லாது எளிமையான தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். அவரது மனைவி ஷாலினி சமூக வலைதளங்களில் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் சில ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வருமாறு அழைக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில், “தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான். தமிழக மக்களை அறிவார்ந்த சமூகமாக மாற்ற விரைவில் முடிவெடு தல வா!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பும் சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் அஜித் ரசிகர்கள் இதேபோன்று அரசியலுக்கு வருமாறு கோரும் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். அப்போது, “மக்களால் நீங்கள்… மக்களுக்காகவே நீங்கள்… உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்கு தேவை” என்ற வாசகத்துடன் தலைமைச் செயலக பின்னணியில் போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், அஜித் அரசியலுக்கு வருவாரா என்ற விவாதம் மீண்டும் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.