முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி அவர்கள் தந்தை தெய்வத்திரு EA. பழனிச்சாமி கவுண்டர் அவர்களின் நினைவாக நடத்தப்படும் சர்வதேச அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளை கோவை L&T பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
போதையின் பிடியில் இருந்து இளைஞர்களை மீட்டெடுத்து, ஒழுக்கமும் ஆரோக்கியமும் நிறைந்த வாழ்க்கைக்கு ஊக்குவிக்கும் நோக்குடன் நடக்கின்ற இந்த போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். வயது, எடை, உயர அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற, வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவை பைட்டர்ஸ் அகாடமி நிறுவனர் மற்றும் ஹாயாசிகா காராத்தே சங்க செயலாளர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாச்சலம், மதுக்கரை நகரக்கழக தலைவர் சண்முகராஜா, கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் செல்வதுரை மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை உருவாக்கி, ஒழுக்கத்தையும், உடல் நலத்தையும் வளர்க்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
Leave a Reply