காலமானார் போப் பிரான்ஸிஸ்

pope francis
Spread the love

உலகம் முழுவதுமுள்ள சுமார் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்ஸிஸ் தனது 88வது வயதில் காலமானார்.

நீண்டநாட்களாக நிமோனியா உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டுவந்த போப் பிரான்ஸின் மரணத்துக்கு உலகளாவிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன்கணக்கான மக்களால் இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூறப்படுவார்.” என்று பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் “கத்தோலிக்க திருச்சபையை உணர்வுத்திறன் மிக்கதாகவும், முற்போக்கு விழுமியங்களுடனும் வழிநத்திய போப் பிரான்ஸிஸ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள், மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான அவரது வாதங்கள் கத்தோலிக்க உலகிற்கு அப்பால் அவருக்கு மரியாதையைப் பெற்றுத்தந்துள்ளன. இரக்கம் மற்றும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையை மனித குலத்துக்கு விட்டுச் சென்றுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்

“கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான புனித போப் பிரான்சிஸின் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். மறைந்த போப் பிரான்சிஸ், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் ஆதரவாக நின்றார், சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசினார். அன்பு மற்றும் மனிதநேயம் பற்றி தன்னுடைய போதனைகளால் மதங்களைக் கடந்து மில்லியன் கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்.” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

“புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் சுடராக இருந்துள்ளது.
அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமையை போதித்து மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய ஆன்மீக தலைவரை உலகம் இழந்திருக்கிறது.” என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் “உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோரை ஈர்த்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் வாட்டிகன் நகரத்தின் இறையாண்மையாளருமான போப் பிரான்சிஸ் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். அமைதியை விரும்புபவர்களுக்கு போப் பிரான்சிஸின் ஆன்மா பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“உலக கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தன் வாழ்நாள் முழுவதும் ஆன்மீக சேவைக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைத்த போப் ஆண்டவரின் புனித ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் சற்று இளைப்பாறட்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்.” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.