, , ,

ஆவியால் வந்த நிலவே…. தினமும் சாப்பிட தோனுது மனமே ….

idly Iniyavan
Spread the love

“பூவுடன் உமை ஒப்பிடலாம்
பூப்போல மென்மையாய் இருப்பதால்…..
நிலவோடு உமை ஒப்பிடலாம்
உம் வடிவம் வட்டம் என்பதால்…”
கவிஞர் தேவா “இட்லி” பற்றிய எண்ண ஓட்டத்தை இப்படி எழுதி இருக்கிறார்.

இட்லி இன்று உலக அளவில் அனைவரும் உண்ணும் பதார்த்தமாய் இருந்து வருகிறது. உலக அளவில் ஆரோக்கிய உணவுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இட்லியும் அங்கம் வகிக்கிறது. இட்லியின் பிறப்பிடம் இந்தோனேசியா என நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் பழங்காலத்தில் இருந்தே பொருட்களை வேக வைக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்துள் ளது. மேலும் சீனாவிலும் இந்த நடைமுறை இருந்துள்ளது.

இந்தோனேசியாவை ஆண்ட இந்து மன்னர்களிடம் சமையல் பணியாளர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்கள் இந்தியா திரும்பும் போது இந்த வேக வைக்கும் நடைமுறையை, நம் நாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு எட்டாம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம் என நூலாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தோனேசியாவில் இருந்து வந்த இட்லி செய்யும் முறையில் பற்பல மாற்றங்கள் உருவாகின. 17ஆம் நூற்றாண்டு நூலான மச்ச புராணத்தில் இட்டலி என்ற பெயர் பல இடங்களில் வருவதாக உள்ளது. 920-ம் ஆண்டு வெளி வந்த கவிதையில்,இட்லி பற்றிய முதல் குறிப்பு உள்ளதாக ‘ இந்திய உணவு வரலாற்றுத் துணை ‘ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி.ஆயிரத்து 025-ம் ஆண்டு சௌந்தராயா என்ற கவிஞர் இட்லி செய்யும் நடைமுறையை விவரித்துள்ளார். தொடர்ந்து கி.பி.ஆயிரத்து 930-ம் ஆண்டு ‘மனசொல்லாச் ‘ என்ற சமஸ்கிருத நூலில் இட்லி பற்றிய இனிய தகவல்கள் உள்ளன. இட்லி செய்யும் முறை பல மாறுதலுக்கு உட்பட்டு பல பெயர்களில், பல வடிவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவை நாவிற்கு சுவையாகவும், இட்லிக்கு ஏற்ற சட்னிகள் வகை, வகையாக வந்து உணவு பிரியர் களை திருப்தி படுத்தி வருகிறது.அதிக நார்ச்சத்துள்ள எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட இட்லியில் கொழுப்புச்சத்து இல்லை என்பதால் ஆரோக்கியம் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. 30 முதல் 40 கலோரிகள் உள்ள இட்லியில், இரண்டு கிராம் புரோட்டின், 2 கிராம் நார்ச்சத்து, 8 மில்லி கிராம் இரும்புச்சத்து, 8 கிராம் கார்பன் ஆகியன உள்ளன. உடலுக்கு தேவையான நல்ல ரத்தத்தை, அதிக அளவு உற்பத்தி செய்வதற்கு இட்லி உறுதுணையாக உள்ளது.

இட்லி இனியவன்

இன்று (மார்ச்-30 )உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது .இந்த நாளுக்கும் கோவைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. கோவை மரக்கடை பகுதியில் பிறந்த இனியவன், பள்ளி விடுமுறை நாட்களில் முருகன் மில் குடியிருப்பு பகுதியில் இருந்த டீக்கடையில் வேலைக்கு சேர்ந்தார் .பின் ஆட்டோ ஓட்டுனராக இருந்த போது,சாய்பாபா காலனி சந்திரா என்பவர் இட்லி மாவினை எடுத்து வர ஆட்டோவை வாடகைக்கு அழைத்தார். இட்லி வியாபாரியான அவருடன் இருந்து,இட்லி தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு, சென்னைக்கு சென்றவர் இனியவன்.

கடுமையான உழைப்பால், இட்லி மட்டுமே பிரத்தியேகமாக செய்யும் தொழிலை மேற்கொண்டார். இட்லி இனியவன் என்ற பிராண்ட் வரவே, இவரது இட்லி இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்ற அளவிற்கு தற்பொழுது உயர்ந்துள்ளார். பிரபல திரை நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட அனைவரின் இல்ல நிகழ்ச்சிகளிலும் இனியவனின் இட்லி கட்டாயம் இடம் பெறுகிறது.

ஆப்பிள், ஆரஞ்சு ,சிறுதானியம், முளை கட்டிய இட்லி என 2 ஆயிரத்து 547 வகையான இட்லி வகைகளை சென்னையில் செய்து உலக சாதனை படைத்துள்ளார். 2015-ம் ஆண்டு ஆயிரம் வகை இட்லி கண்காட்சி நிகழ்ச்சியில் இட்லி இனியவன் பிறந்த நாளான மார்ச் -30 உலக இட்லி தினமாக. அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி கோவையில் பிறந்த இட்லி இனியவன் கூறும் போது, இட்லியில் பல சுவையும், வடிவங்களையும், வகைகளையும் ஒவ்வொரு நாளும் அறிமுகம் செய்ததால், இட்லி உணவிற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டது. கவிப்பேரரசு வைரமுத்து, முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் எனது இட்லியை விரும்புபவர்கள்.

இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ற வகையில், உடலுக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத, தாய்ப்பாலுக்கு அடுத்த ஆரோக்கிய உணவாக உள்ள இட்லியை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. அந்த வகையில் பல வெளிநாடுகளுக்கு, சென்று இட்லியின் பெருமையை உலகறிய செய்துள்ளேன். துபாய், சீனா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சிகளில் அந்த நாட்டின் அழைப்பை ஏற்று இட்லி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். வகை, வகையான இட்லிக்கான அங்கீகாரம் மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றார் இட்லி இனியவன்.