இந்தியாவின் மிகப்பெரிய தங்க, வைர நகை விற்பனை நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள கல்யாண் ஜூவல்லரி ஜனவரி மாதத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
கேரளாவை மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கல்யாண் ஜூவல்லரி நிறுவனம், தங்க நகைகள், வைர நகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என 277 ஷோரூம்களுடன் இயங்கி வருகிறது. இன்னும் 2026ம் நிதியாண்டில் பல ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் 1993 இல் TS கல்யாணராமனால் தொடங்கப்பட்டது.
2021ம் ஆண்டு பங்குச்சந்தையில் கல்யாண் ஜூவல்லரி நிறுவனம் பட்டியலிடப்பட்டது. அதிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வந்த நிறுவனம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து வீழ்ச்சியின் பாதையில் பயணித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதன் காரணமாக நிறுவனத்தின் பங்கு விலை 40 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்தது.
கல்யாண் ஜூவல்லரி நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைப்பதற்காக, மோதிலால் ஓஸ்வால் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதாவது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் போது பங்குச்சந்தையில் பங்கு விலை உயரும், நிறுவனத்தின் மதிப்பும் உயரும் என்பதால் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை கல்யாண் ஜூவல்லரியும், மோதிலால் ஓஸ்வால் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமும் மறுத்துள்ளது. ஆனாலும் சரிவிலிருந்தும் மீள முடியாமல் கல்யாண் ஜூவல்லரி தவித்து வந்தது. இந்த குற்றச்சாட்டு அடங்குவதற்குள், கல்யாண் ஜூவல்லரி பங்குகளை வைத்திருக்கும் புரோமோட்டார்களான அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பங்குகளை அடமானம் வைப்பதற்கான காரணமும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கல்யாண் ஜூவல்லரியின் பங்குகளை அதிக அளவில் வைத்திருப்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் அதிக அளவில் வைத்திருக்கின்றனர். சில்லறை முதலீட்டாளர்கள் வெறும் 7 சதவிகித பங்குகளை மட்டுமே வைத்துள்ளனர். இந்த நிலையில் பங்குச்சந்தையில் யார் பங்குகளை விற்பனை செய்து, பங்கு விலையை வீழ்ச்சி அடைகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.
கல்யாண் ஜூவல்லரி நிறுவனத்தின் லாபம் சிறப்பாக இருந்த நிலையில், பங்கு விலை சரிவு என்பது நிறுவனத்துக்கான பெரும் பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் 2024-25ம் ஆண்டின் காலாண்டு முடிவுகளை சமீபத்தில் நிறுவனம் வெளியிட்டது. இதில் நிறுவனத்தின் லாபம் அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டில் ரூ.217.96 கோடியாக இருந்தது. இதேபோல் நிறுவனத்தின் வருவாயும் கணிசமாக உயர்ந்து ரூ.6,392 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள், லாபம், வருவாய் என அனைத்தும் சிறப்பாக இருந்த போதிலும், நிறுவனத்தின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே கல்யாண் ஜூவல்லரி நிறுவனத்தின் இந்த வீழ்ச்சி இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முதலீட்டாளர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
Leave a Reply