, , , , , , , , , ,

பதற வைத்த டேங்கர் லாரி விபத்து.

Spread the love

கோவையில் 8 மணி நேரம் திக் திக்..!
பதற வைத்த டேங்கர் லாரி விபத்து…


எப்போதும் பதற்றத்திலும் பரபரப்பிலும் இருக்கும் கோவையை மேலும் ஒரு பீதிக்கு உள்ளாக்கியது சில தினங்களுக்கு முன்பு நடந்த கேஸ் டேங்கர் லாரி விபத்து.  அடுத்து என்ன நடக்குமோ என கோவைவாசிகள் பதற்றத்தில் இருக்க, ஒருவழியாக பாதுகாப்பாக மீட்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகே  அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து,  கோவை நகரப் பகுதியான பீளமேட்டில் உள்ள பாரத் கேஸ் குடோனுக்கு எல்.பி.ஜி. கேஸ் ஏற்றி டேங்கர் லாரி ஒன்று, கடந்த 3ஆம் தேதி அதிகாலை வந்துள்ளது.

கோவை, அவிநாசி சாலையில் உள்ள மேம்பாலத்தில் டேங்கர் லாரி, வளைவில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. லாரியில் இருந்த புல்லட் டேங்கர் மட்டும் தனியாக பிரிந்து மேம்பாலத்தில் உருண்டது.

அந்த அதிர்வில், புல்லட் டேங்கரில் இருந்து சமையல் எரிவாயு வெளிப்பட்டு கசிய தொடங்கவே, டேங்கர் லாரி ஓட்டுநரும், விபத்தை நேரில் பார்த்தவர்களும் பதறத் தொடங்கினர். இதையடுத்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கவே, அவர்கள்  உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால், அங்கு வந்த பிறகே நினைத்ததைவிட டேங்கர் லாரியை மீட்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை உணர்ந்தனர். விபத்து குறித்து லாரி ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில், பாரத் கேஸ் நிறுவன அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து வாயுக் கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முதல்வேலையாக, டேங்கர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிவாயு கசிவை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர். இதனிடையே, எல்.பி.ஜி. கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததும், அதிலிருந்து கேஸ் வெளிப்படுகிறது என்ற தகவலும் காட்டுத் தீயாக கோவை நகரில் பரவ, ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டது.

பாரத்கேஸ் நிறுவன பொறியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில்,  இரண்டு கிரேன்கள் மூலம் லாரியினை தூக்கி நிறுத்த முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் சம்பவ இடத்தில் வந்தார். தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் வருகை தந்தனர். மீட்பு நடவடிக்கைகள், மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 35 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு கிலோ சுற்றளவுக்கு போக்குவரத்து மாற்றப்பட்டது. திருச்சி ஐஓசிஎல் நிறுவனத்தில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.  சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகே கோவை மாவட்ட காவல் துறையினர், பொதுமக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த விபத்து குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் கொச்சியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்கு உள்ளானது.  முதல் வேலையாக டேங்கர் லாரியில் இருந்து வாயுக் கசிவு தற்காலிகமாக நிறுத்தி, பின்னர் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மீட்புப் பணிக்காக 3 ராட்சத கிரேன்கள் பீளமேட்டில் இருந்து வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து கீழே விழுந்து கிடந்த டேங்கரில் பெரிய கயிறைக் கட்டி அதை கிரேனுடன் இணைத்து டேங்கரை தூக்கி நிறுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் டேங்கர் தூக்கி நிறுத்தப்பட்டது” என்று கூறினார்.

விபத்து குறித்து பேட்டி அளித்த லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன், “கொச்சியிலிருந்து வந்த போது, அதிகாலை 3.00 மணியளவில் விபத்து நடந்தது. நான் மெதுவாகத்தான் ஒட்டி வந்தேன். 10 கி.மீ. வேகத்தில் கூட டேங்கர் லாரியை நான் ஓட்டி வரவில்லை. வளையும் போது திடீரென லாரியில் ஆக்சில் கட் ஆகி விழுந்து விட்டது. இந்த விபத்தில் எனது 2 தோள்பட்டைகளிலும் அடிபட்டுள்ளது” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக, எல்.பி.ஜி. டேங்கர் லாரியின் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.