கோவை நகரின் முக்கிய சாலையான அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைந்து உள்ளது. கோவை நகரில் மிக முக்கிய இணைப்பு பாலமாக இது உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கேஸ் குடோனுக்கு எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது.
அவிநாசி சாலை உப்பிலிபாளையம் பாலத்தில் சென்று கொண்டு இருந்த பொழுது திடீரென லாரிக்கும் டேங்கருக்கும் இடையிலான இணைப்பு அறுந்து டேங்கர் மட்டும் பாலத்தின் சாலையில் விழுந்தது .விழுந்த வேகத்தில் டேங்கரில் இருந்து எரிவாயு வெளியாக துவங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டேங்கர் லாரி டிரைவர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதிகாலை நேரம் என்பதால் மேம்பாலத்தில் போக்குவரத்து குறைவாக இருந்தது .உடனடியாக மேம்பாலத்தில் மற்றும் சுற்று வட்டார சாலைகளில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
பின்னர் தீயணைப்பு துறையினர் டேங்கர் லாரியில் தண்ணீர் பிச்சை அடுத்து தீ பிடிக்காத வண்ணம் செயல்பட்டு வருகின்றனர் .தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து டேங்கரை அங்கு இருந்து அகற்றுவது குறித்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கு இடையே அதிகாரிகள் கூறும் போது வேறு ஒரு டேங்கர் கொண்டு வந்து அதில் உள்ள எரிவாயுவை மாற்றிய பிறகு முழுமையாக அகற்ற முடியும் என முதல் கட்டமாக தெரிவித்து உள்ளனர். நகரின் முக்கிய சாலைகள் அதிகாலையில நடந்த இந்த விபத்தினால் கோவையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.
Leave a Reply