கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, கோவை சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளில் கீழ் 7 ஆயிரத்து 945 பயனாளிகளிக்கு 110.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
இவ்விழாவில் விழா உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மலை வளங்கள் சூழ்ந்த குளிர்ச்சி பொருந்திய இனிய மாவட்டம் கோவை மாவட்டம். கல்வி வளமும், தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை கொஞ்சும் கொங்கு தமிழை கொண்டது, தமிழ் செம்மொழி மாநாட்டை கண்டது. பலமுறை கோவைக்கு வந்து நலத்திட்டங்களை தொடங்கி வைத்திருந்தாலும் இன்று மக்களுடன் முதல்வர் என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். மக்களுடன் முதல்வர் போன்ற திட்டத்தின் மூலமாக அரசுக்கு மக்களுக்குமான நெருக்கம் அதிகமாகிறது. அரசு வேறு மக்கள் வேறு அல்ல என்பதை உணர்த்துகின்ற திட்டம்தான் இது. இதன் மூலம் மக்களும் மாநிலமும் சேர்ந்து வளருவர்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த நான்காம் தேதி புயலுடன் கூடிய பெருமழை பெய்தது. 47 ஆண்டு காலமாக இல்லாத அளவில் மழை பெய்தது. நான்கைந்து நாட்களில் இயல்பு நிலை திரும்பியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தரும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தேன். தற்பொழுது தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. சென்னையில் செயல்பட்ட அனுபவங்களைக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென் மாவட்ட மக்களை காப்போம் என்பது உறுதி.
இன்று இந்த திட்டம் கோவையில் துவக்கி வைத்ததை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்கள். இரண்டாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாமில் பெறப்படும் அனைத்து கோரிக்கைகளும் அரசால் பரீசிலிக்கப்பட்டு முறையான கோரிக்கையாக இருந்தால் அது நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளிக்கிறேன். இந்த கோரிக்கைகள் அனைத்தும் மக்களுடன் முதல்வர் இணையத்தில் பதிவு செய்யப்படும். அரசு மீது ஏழைகள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை வலுபட வேண்டும். பொதுமக்கள் கோட்டையை நோக்கி மனு கொடுக்க வருவதை மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட அலுவலர்களும் குறைக்க வேண்டும். வட்ட அளவில் முடிய வேண்டியதை அதற்குள்ளும் மாவட்ட அளவில் முடிய வேண்டியதை மாவட்ட அளவிலும் முடிப்பதற்கு போதிய முயற்சிகளை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.
இந்த விழாவில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கு கால்கோள் நாட்டப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு கோவை மாநகரில் தமிழறிஞர் கலைஞரால் தமிழ்நாடு அரசின் சார்பில் உலக செம்மொழி மாநாடு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் நிறைவுறையாற்றிய கலைஞர், 15 அறிவிப்புகளை வெளியிட்டார் அதில் ஒன்றுதான் கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்பது. தாவரவியல் தோட்டத்தை பின்புலமாக வைத்து இந்த செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இயற்கையை தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் ஏற்ற வகையிலும், தாவர இனங்கள் நிலைக்கத்தக்க வகையிலும், நீலகிரி உயிர்க்கோள படுக்கையில் உள்ள அரிய வகை தாவர இனங்களை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் என்ற நோக்கில் இந்த செம்மொழி பூங்கா கோவையில் அமைக்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பிலும் இரண்டாம் கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பிலும் செம்மொழி பூங்கா அமையப்பட உள்ளது. 133.21 கோடி மதிப்பில் உலக தரத்தில் இந்தியாவிலேயே தனித்துவத்தோடு பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கி இருக்கும். இந்த பூங்காவில் செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நட்சத்திர வனம், நறுமண வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்படும். இது போன்ற ஒரு சிறப்பான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று பேசினார்.
இதில், அமைச்சர்கள் முத்துச்சாமி, செஞ்சி மஸ்தான், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன். கழக துணைப்பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், எம்பிக்கள் சண்முகசுந்தரம், பிஆர்.நடராஜன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்,
மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன். முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் மாநில அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் பா.அருண்குமார், கோவை செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Leave a Reply