நாப்கான்-24 சுவாச ஆரோக்கியம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை விழிப்புணர்வு வாக்கத்தான்

Spread the love

நவம்பர் 21 முதல் 24 வரை 4 நாள் நுரையீரல் நோய்களுக்கான தேசிய மாநாட்டையொட்டி வாச ஆரோக்கியம் – சுறுசுறுப்பான வாழ்க்கை முறை விழிப்புணர்வு வாக்கத்தான்: கோவையில் நடைபெற்றது

கோவை,நவ.20-

கோவையில் நவம்பர் 21 முதல் 24 வரை 4 நாள் நடைபெற உள்ள நுரையீரல் நோய்களுக்கான தேசிய மாநாடு 2024-ஐயொட்டி (நாப்கான் 2024) கோவை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் சுவாச ஆரோக்கியம் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை விழிப்புணர்வு வாக்கத்தான் 20-ந்தேதி நடைபெற்றது. இதில் கோவையில் உள்ள பிரபல மருத்துவர்களும் முக்கிய பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சமீப காலமாக நாள்பட்ட மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் அதிகரித்து வருவது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அவற்றை தடுப்பது குறித்தும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குறித்தும் இந்த வாக்கத்தான் மூலம் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து நாப்கான் 2024 மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன் குமார் கூறுகையில், சுவாச நோய்கள் அதிகரிப்பு என்பது ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார கவலையாக உருவெடுத்துள்ளது. இந்த வாக்கத்தான் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒவ்வொருவரும் மாறுவதற்கும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த வாக்கத்தான் மூலம் எடுத்துக் கூறப்பட்டது என்று தெரிவித்தார்.மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், சுற்றுச்சூழல் மாசுபாடு சுவாச நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எங்கள் வாக்கத்தான் உடற்பயிற்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் தூய்மையான காற்று மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான நடவடிக்கைக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.கோவையில் நடைபெற்ற இந்த வாக்கத்தான், சுவாசப் பராமரிப்பில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக திகழும் லூபின் லிமிடெட் ஆதரவுடன் நடைபெற்றது. இது குறித்து இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு மூத்த துணைத் தலைவர் ஹிராக் போஸ் கூறுகையில், எங்கள் நிறுவனம், சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. நோயாளியின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வாக்கத்தான் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.மேலும் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆகியவையும் இந்த நிகழ்ச்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கின. நாப்கான் 2024 என்பது நுரையீரல் நோய்களுக்கான 26வது கூட்டு தேசிய மாநாடு ஆகும், இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நுரையீரல் நிபுணர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாடு கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நவம்பர் 21 முதல் 24 வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நுரையீரல் மருத்துவத் துறையை முன்னேற்றும் வகையில் பயிற்சி பட்டறைகள், விரிவுரைகள், விவாதங்கள் மற்றும் சொற்பொழிவுகள் இடம்பெற உள்ளது.