ஆசிரியர்
தி கோவை ஹெரால்ட்
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மேற்கு மண்டலத்தில் உள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளில்
44 இடங்களை அதிமுக எளிதாக கைப்பற்றியது.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்
24 தொகுதிகளை தக்க வைத்துக் கொண்டது.
தமிழக மேற்கு மாவட்டங்களான தர்மபுரி, சேலம்,நாமக்கல், திருப்பூர், ஈரோடு ,கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக மிகவும் வலுவாக இருந்ததால் 44 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் அதிமுகவை செல்வாக்கு மிக்க கட்சியாக வார்த்தெடுத்து,
வளர்ந்தெடுத்து வந்ததால் இந்த வெற்றி அவர்களுக்கு சாத்தியமாயிற்று.
அதிமுகவின் இந்த வெற்றிக் கோட்டையை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் திமுக அரியணை ஏறியது முதல் தகர்ப்பதற்கான பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். முதலில் கோவை
மாவட்ட பொறுப்பு அமைச்சராக சக்கரபாணி நியமிக்கப்பட்டார்.கோவை மாவட்ட திமுகவினர், சற்றே வேகமாக செயல்பட்டாலும், அமைச்சர் சக்கரபாணியின் நிதான போக்கு, அரசு நிர்வாகத்திற்கும் சரி, கட்சியினருக்கும் சரி, ஏன் தலைமைக்கும் கூட திருப்தி இல்லாததால் பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார் .திமுக இளைஞரணி செயலாளரும், அப்போது அமைச்சராக இருந்த, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில காலம் கோவை மாவட்ட பொறுப்புக்களை நிர்வகித்தார்.
அதிகமான பணி சுமை காரணமாக, அவரால் கோவை மண்டலத்தை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக வந்தார்.
அப்போது நடந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே வெற்றியினை அமோகமாக ஈட்டினர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் அணுகு முறை,கட்சிப் பணிகளில் ஆர்வம், சுறுசுறுப்பு,
தேர்தல் வியூகம் உள்ளிட்டவைகளால் அதிமுகவின் கோட்டையாக இருந்த கோவை பகுதியினை திமுகவிற்கு சாதகமாக்கியதால் தலைமையின் அதீத அன்பை பெற்றவர் ஆனார்.
அமலாக்கத்துறையால் சிறைக்குச் சென்று மீண்டு ,கோவைக்கு பொறுப்பு அமைச்சரான பின் முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்கும் கோவை நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்த அமைச்சர் செந்தில் பாலாஜி டீம் மற்றும் கோவை மாவட்ட திமுகவினர் திட்டமிட்டனர்.
முதல்வர் கோவை விமான நிலையம் வந்து இறங்கியது முதல், டைடல் பார்க் வரை வழி நெடுக பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளித்ததில் ,
முதல்வருக்கு பெரும் உற்சாகம் ஏற்பட்டது.
138 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தொழில் நுட்ப கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்ததன் மூலம், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த முடியும். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளுக்கு இளம் வாக்காளர்களின் கவனம் சிதறி செல்லாமல் இருக்க,இது போன்ற தகவல் தொழில் நுட்ப துறையில் அவர்களை கவனம் செலுத்தி ,அதன் மூலம் திமுக அரசுக்கு ஆதரவை பெறும் அரசியல் யுக்தி எனவும் இந்த நிகழ்வு பேசப்படுகிறது.
போத்தனூரில் நடைபெற்ற கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் 260 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க அனைவரது செல்போன்களும் உள்ளே எடுத்து வர அனுமதிக்க
வில்லை.
கூட்டத்தில் முதலில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக தோல்வி அடைந்ததால்
முதலமைச்சர், தமிழகத்தில் முதல் ஆய்வுக்கூட்டம் இங்கு நடத்துகிறார்.
மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் திமுகவினரே வெற்றி பெற்று, அதனை தலைவரின் கரங்களில் ஒப்படைப்போம் என்றார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் ,நிர்வாகிகளின் மினிட் நோட்களை ஆய்வு செய்த பின் ,திராவிட இயக்கத்திற்கும் கோவைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோருக்கு கொள்கை சார்ந்த விஷயங்களில் கோவை மிகுந்த ஆதரவை அளித்தது.
கட்சியில் தொண்டர்கள் இருப்பதால் தான், நிர்வாகிகளாக அனைவரும் இருக்க முடிகிறது.
அதனால் கட்சி தொண்டர்களை அரவணைத்து செல்ல வேண்டும். கட்சி தொண்டனை பலரும் புறக்கணிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவைகள் எல்லாம் இனி மேல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் மத்தியில் திராவிடக் கொள்கையை விதையுங்கள்.
அதன் மூலம் அவர்களை பாசறைக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து,அவர்களை திராவிட கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக உருவாக்க வேண்டும்.
திமுகவில் உள்ள கட்டமைப்பு வேறு எந்த கட்சியிலும் இல்லை .நாம் நினைத்தால், ஒரு செய்தியை தமிழகத்தில் உள்ள ஆறரைக்கோடி வாக்காளர்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும். குடும்பத்தையும் தொழிலையும் கவனித்த பின்பு கட்சிப் பணிக்கு நேரத்தை செலவிடுங்கள். என அறிவுரை கூறினார், பின் அனைத்து நிர்வாகிகளும் முதல்வருடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இரவு விருந்தாக கட்சியினருக்கு அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.
2-ம் நாள் முதல்வர் ஸ்டாலின், செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்த பின்பு, காந்திபுரத்தில் 300 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் .
அப்போது ,கம் பேக் செந்தில் பாலாஜி ,கோவை மாவட்டத்திற்கு இன்னும் நிறைய திட்டங்களை அவர் செயல்படுத்த உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புகழாரம் சூட்டினார்.
கோவை மாவட்டத்திற்கென பல புதிய திட்டங்களை அறிவித்தார் விழா முடிவில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முதல்வரிடம்,
கோரிக்கை மனு கொடுத்தார்.அரசியல் நாகரீகம் கருதி இருவரும் புன்னகை ததும்ப பேசிக்கொண்டனர்.
முதல்வர் கோவையில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், கோவை மண்டலத்தில் திமுகவை முதன்மையாக கொண்டு வர வேண்டும் என்பதே நோக்கமாக இருப்பதாகவும்,
வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற. வேண்டும் என்பதையே காட்டுகிறது.
அதற்கான பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி விட்டதாகவும், அதிமுக வலுவாக உள்ள இடங்களில், அதனை திமுகவிற்கு சாதகமாக மாற்றுவது பற்றியும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இரண்டாவது இடத்தை பிடித்து, தனது வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளதையும், நடுத்தர மக்கள், தொழிலதிபர்கள்
மத்தியில்
பாஜகவிற்கு உள்ள செல்வாக்கினை குறைக்கவும் திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும் எனவும், முதல்வர் மு. க. ஸ்டாலின் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வரும் சட்ட மன்றத் தேர்தலை ஒட்டியும்,அதில் திமுக கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே முதல்வரின் கோவை சுற்றுப்பயணம் அமைந்தது என நடுநிலையாளர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் மீது அதிருப்தி
கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது, அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல திமுகவினர் அறிவாலயம், அன்பகம், தலைமைச் செயலகம் என பல இடங்களில் காண முடிகிறது. அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். எந்த கோரிக்கையாக இருந்தாலும் அல்லது புகாராக இருந்தாலும், அதனை கோவையிலேயே சரி செய்து விடலாம். அதனை விடுத்து தலைமைக்கு செல்வதை திமுகவினர் தவிர்க்க வேண்டும் என பேசினார்.
இப்படி அமைச்சர் பேசியதால் திமுகவில் உள்ள பலரும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிருப்தியில் உள்ளனர். சுயமரியாதை இயக்கத்தில் இருக்கின்றோமா? என்ற கேள்வி எழுகிறது என பல திமுக சீனியர் நிர்வாகிகள் உள்பட பலர் புலம்பி வருகின்றனர்.
கடவுளே…! அஜித்தே…!
முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற நூலக அடிக்கல் நாட்டு விழாவில், கல்லூரி மாணவர்கள் – மாணவிகள் என பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். முதல்வர் விழா நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த போது,
அவர்கள் திடீரென, ” கடவுளே….! அஜித்தே…! ” என முழக்கமிட்டனர்.
அதற்கு நடிகர் விஜயின் மாணவ ரசிகர்கள் பதில் அளிக்கும் வகையில் “தவெக ” என முழங்கினர். இதனால் சற்றே பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலால் முதல்வர் ஸ்டாலின் முகம் சுழித்தார்.
நடிகர் அஜித் குமார் ரசிகர்கள் கடவுளே அஜித்தே என்ற கோஷங்களை அண்மைக்காலமாக பல இடங்களில் எழுப்பி வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் இந்தியா – வங்காளதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடை பெற்ற போதும், தியேட்டர்களிலும் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியிலும் ,சமூக வலைத்தளங்களிலும் இந்த கோஷத்தை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply