திருக்கூந்தலூர் அன்னை ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் சுவாமி திருக்கோவிலில், அய்யன் சிவனை தொழுது அவனடி சேர்ந்த சினருட்சித்தர் தான் உரோமரிஷி சித்தர்.
உடல் முழுவதும் உரோமம் முளைத் திருந்தமையால் உரோம முனி எனக்காரணப் பெயரைப்பெற்றாலும், சீனத்திலிருந்து வந்து தமிழகத்தில் சித்தியடையப்பெற்ற காலங்கிநாதர், போகர் சித்தர் போல் இவரும் உரோமாபுரியிலிருந்து தமிழகம் வந்து சிவனருள் பெற்று அஷ்டமா சித்தி பெற்ற பதினெண் சித்தரில் ஒருவராய் விளங்கி அடியார்க்கு அற்புதங்கள் பல செய்த ஞான வள்ளல் தான் உரோமரிஷி சித்தர். சிவனருட் சித்தர் உரோமரிஷி சித்தர் இயற்றிய அரிய மருத்துவ நூலை, பொறாமை எண்ணம் கொண்ட காரணத்தால் சட்டைமுனி சித்தர் கிழிக்க முனைந்த நிலையில், அந்நூலை இவரது குருநாதரான குறு புசுண்டர் தனது சடாமுடியில் ஒளித்துவைத்து அகத்திய முனிவரிடம் கொடுக்க, அகத்திய மாமுனி அந்த அரிய வைத்திய நூலை நெடுநாள் பாதுகாத்து வைத்திருந்து மீண்டும் உரோமரிஷியிடம் ஒப்படைத்தார்.
உரோமரிஷி சித்தர், திருக்கூந்தலூர் அரசலாற்றின் தென் கரையில் தவம் செய்து வரும் வேளையில் நாடிய அடியார்க்கெல்லாம் வறுமை நீங்கி நல்வாழ்வு பெறவும், செம்மையான சிவனருட்செல்வராக அடியாரெல்லாம் சிவத்தொண்டு ஆற்றி பிறவிப்பயனை செவ்வனே அடையவும் தமது அஷ்டமா சித்தியால் தாடி வழியே பொன் வரவழைத்து அவர்க்கெல்லாம் அளித்து வந்தார்.
உரோமரிஷி சித்தர் ஆரூடம், ஜோதிடம், வைத்தியம், முப்பு ஞானம் போன்ற அரிய சாஸ்திரங்களில் நாகாரூடம்,வகார சூத்திரம், சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்திய சூத்திரம்,அமுத கலை ஞானம், உரோமரிஷி முப்பு சூத்திரம் மற்றும் உரோமரிஷி ஜோதிட விளக்கம் போன்ற மானிடர் யாவருக்கும் பலன்களையும் தீர்வையும் காட்டும் அற்புதப் படைப்புகளை உலகிற்கு அளித்திருக் கிறார்.
இத்தகைய அற்புதங்கள் செய்த உரோமரிஷி சித்தர் சந்திர கிரகத்தை பிரதிபலிப்பவர், ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோசங்களை நீக்கி மனமது செம்மையடைய வைப்பவர், மனோபலம் பெருக வைத்து செயல்களில் தெளிவு, முடிவுகளில் சஞ்சலம் நீக்கி, படிப்பு ,தொழில் சிறக்கச்செய்பவர்,தாயார்,குழந்தைகள் வழியில் ஏற்படும் இன்னல்கள் களைபவர். உரோமரிஷி சித்தர் சரும, கேச பாதிப்புகளை களைபவர், இவருக்கு மூலிகைகளால் ஆன எண்ணெய்க்காப்பிட்டு அந்த எண்ணெயை சரும பாதிப்புள்ள இடங்களில், கேசத்திற்கு தேய்த்துவர, பாதிப்புள்ள இடங்களில் சருமம், கேசம் சீராகும்.

Leave a Reply