அகத்தியன் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தவர் ஆவார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’ என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழைப் போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்குப் பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் அழைக்கின்றனர். தென் திசைக்கு வந்த அகத்தியன், பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார். இராமபிரானுக்குச் சிவகீதையை போதித்தவர் அகத்தியர். சிவபூசை செய்வதற்காகக் கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக்கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியன். கயிலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியனைத் தென்திசைக்குச் செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியன். மேருமலைக்குச் செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியனைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென்திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியன், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக் கூறப்படுகிறது. வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியைத் திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியனிடம் முறையிடவே, அகத்தியன் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியன் வயிற்றிலிருக்கும் வாதாபியைக் கூப்பிட அகத்தியன் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியனிடம் மன்னிப்பு கோரினான். அகத்தியன் சித்த வைத் தியத் திற்குச் செய்த பணி சிறப்பா னது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங் களுக்கும் பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியன் பெயரில் வெளி யாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப் பட்டிருக்கின்றன. அகத்தியன் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோசங்கள் பற்றிக் கூறியுள்ளார்.

Leave a Reply