தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்வது தொடர் கதையாக உள்ளன. உள்துறை பொறுப்பினையும் வகிக்கும் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலினை , நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வல லைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஜெயக்குமார் மரணம்,பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் கொலை வழக்கு விசாரணையில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நம்பத் தகுந்த தகவலும் கிடைக்காத காரணங்களால் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.
இதே திருநெல்வேலியில் பிரபல ரவுடி தீபக் ராஜா என்பவர் அவரது காதலி முன்பாகவே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்கள் அடங்கும் முன்பே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகம், படுகொலை செய்யப்பட்டார். கொலையான சண்முகம் ,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியாக கருதப்பட்டவர். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள கோவிலை நிர்வகிப்பது தொடர்பான பிரச்சனையில் கொலை செய்யப்பட்டார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணம்.
கலாச்சாராயம் அருந்தி உயிரிழந்த 66 நபர்களில் பெரும்பாலானோர், தலித் சமுதாயத்தினர் என கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் அகில இந்திய அளவில் ஆளும் திமுக தரப்பினருக்கு, பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக வழக்கம்போல அரசியல் கட்சிகள் பூரண மது விலக்கு பிரச்சனையைப் பேசினார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அனைத்து கட்சியினரும், உயிரிழந்த குடும்பத்தினருக்கும், மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
அரசு சார்பில், அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, மா சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசு அறிவித்த ரூ 10 லட்சத்தினை வழங்கினர். அரசு கொடுத்த 10 லட்ச ரூபாய் பெரும் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டது. சாலை விபத்துகளில் இறந்தவர்களுக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் கொடுக்கும் அரசு ,சாராயம் குடித்து பலியானவர்களுக்கு 10 லட்சமா என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் இருந்தன. இந்த சம்பவம் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி,திமுகவில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு ஆர்ப்பாட்டத்திலும் இறங்கின. இதனால் திமுக தரப்பிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை, பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது, திமுக அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது .
இந்த சம்பவத்தால், பெரிதும் அப்செட் ஆன திமுக அரசு அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்தது. குறிப்பாக சென்னை மாநகர காவல் ஆணையாளர், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி, துணை ஆணையாளர்கள் என பலரும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இது போன்ற அரசியல் தலைவர்கள் படுகொலையால், காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்வது,எல்லா ஆட்சிக் காலத்திலும் உள்ள நடைமுறைதான் என்றாலும், இந்த இட மாற்றங்களால்,குற்ற சம்பவங்கள் குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்தாண்டு மரக்காணத்தில் கள்ள சாராயம் அருந்தி பலியான சம்பவத்திற்கு, அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். இப்படி மாற்றம் செய்த பிறகும், தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. எந்த சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அதிகாரிகள் பலிகடா ஆக்குவதை ஆளும் அரசுகள் வாடிக்கையாக கொண்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Leave a Reply