, ,

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் வெற்றி பெறுமா?

vijay
Spread the love

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை அறிவித்ததோடு முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்.அதன் ஒரு பகுதியாக 10வது மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடிகர் விஜய் சார்பில் நீலாங்கரையில் உள்ள பனையூர் பங்களா அருகே ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
விஜய்யின் ரசிகர் மன்றத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்த போதிலும் இந்நிகழ்வில் ரசிகர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இவ்விழாவிற்காக சுமார் 2 கோடி செலவு செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. மாணவ மாணவர்களின் போக்குவரத்து செலவு, தங்குமிடம் உள்ளிட்ட என அனைத்தும் இரண்டு கோடியில் அடங்கியதாகவும் தெரிய வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சியின் போது நடிகர் விஜய்யை வரவேற்கும் விதமாக கட் அவுட் பேனர் என ஒன்றைக் கூட பார்க்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் அரசியலுக்கு நடிகர்கள் வரும் போதெல்லாம் பரபரப்புக்கு பஞ்சமே கிடையாது.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகராக செல்வாக்கு பெற்ற நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் உடனடியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகரின் அரசியல் பிரவேசத்தில் உச்சபட்ச வெற்றியின் அடையாளமாக திகழ்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே. அவரைத் தொடர்ந்து தனிக்கட்சி ஆரம்பித்து காணாமல் போன நடிகர்களின் பட்டியல் பெரிதாகவே உள்ளது. மக்கள் செல்வாக்கு காரணமாக தொடர் வெற்றிக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒரு சிறந்த உதாரணம் என்றால் வெற்றிகளை குவித்தாலும், சூழ்நிலை கை கொடுக்காவிட்டால் அத்தனையும் பாதகமாகிவிடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர் ஆந்திராவின் மறைந்த முதல்வர் என் டி. ராமராவ். தற்போதைய காலகட்டத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து கணிசமான வாக்குகளை பெற்று வெற்றியும் இல்லாமல் படுமோசம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாமல் உள்ளவர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.
தனியாக கட்சி தொடங்கிய நடிகர் கமலஹாசன் சினிமாவில் ஒரு கால் அரசியலில் ஒரு கால் என இருந்து கொண்டதால் அவரது கட்சி வெற்றியடையாமல் போனது.  பாதி அரசியல்வாதியாக இருப்பதால் அவர் முழு அரசியல்வாதி என்ற தகுதியை இழந்துவிட்டார். நடிகர் விஜய் யாரையும் பகைத்து கொள்ள விரும்பாமல் எல்லோருக்கும் நல்லவராக இருக்க விரும்பினால் தமிழக வெற்றி கழகம் எனும் அவரது கட்சிக்கு மூடு விழா நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். மக்கள் மத்தியில் கிடைக்கும் புகழை கொண்டு அரசியலில் வெற்றி காண்பது என்பது மிக மிக கடினமான காரியம். ஆகவே சமூக வலைத்தளங்கள் வேரூன்றி தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில் எல்லா விஷயங்களிலும் தெளிவான பார்வை இல்லாவிட்டால் சுற்றி நிற்கும் எதிர் தரப்பு நடிகர் விஜயை துவம்சம் செய்து விடுவார்கள். ஆகவே தெளிவான அரசியல் சித்தாந்தத்தோடு எதிரியை அடையாளம் கண்டு களப்பணியாற்றினால் வெற்றி நிச்சயம். மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் வெற்றி பெறுமா என்பதற்கான காத்திருப்பிற்கு நீண்ட காலம் தேவை இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *