நாட்டின் வளர்ச்சிக்கு சாலைப் போக்குவரத்து மிக மிக இன்றியமையாதது.
தலைநகர் சென்னையை அடுத்து, பத்துக்கும் அதிகமான மேம்பாலங்களைக் கொண்ட மாவட்டமாக உள்ளது கோவை.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியில் உக்கடம், அவிநாசி சாலை பகுதிகளில் மேம் பாலங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
உக்கடம் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தமிழ் நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலமாக கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
2020-ம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி , அவிநாசி சாலை மேம்பால பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கி வைத்தார்.
அவிநாசி சாலை உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரையிலான 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு மிக நீளமான மேம்பாலமாக இது அமைய உள்ளது. ரூ. ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டது.
அவிநாசி சிலையின் இரு புறங்களிலும், ஆக்கிரமிப்பு மற்றும் நில உரிமைதாரர் களிடம் இழப்பீடு பேச்சு வார்த்தை உள்ளிட்ட காரணங்களினால் மந்த கதியில் பணிகள் இருந்தது.
தற்போது அவிநாசி சாலை மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
305 தாங்கு தூண்களுடன், 17.25 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் காரிடார்களுடன் அவிநாசி சாலை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஏழு இடங்களில் ஏறு தளம், இறங்கு தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விமான நிலையம், ஹோப் காலேஜ், பீளமேடு, நவ இந்தியா,லட்சுமி மில்ஸ் சந்திப்பு அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் இத்தளங்கள் அமைய உள்ளன. மேலும் நான்கு வழி சாலையாக இந்த மேம்பாலம் அமைய உள்ளது.
ஆய்வுக்கூட்டம்
இந்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைந்து,மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்
கூட்டத்தில், அவிநாசி சாலை மேம்பால கட்டுமானப் பணிகள் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 190 கான்கிரீட் தள காரிடர்கள் அமைக்கப்பட்டு விட்டது. மீதி உள்ள 114 கான்கிரீட் தள காரடர்கள் இணைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு மொத்தம் 304 கான்கிரீட் தள காரிடார்கள் அமைக்கப்பட உள்ளது.
7 இடங்களில் ஏறுதளம், இறங்குதளம் அமைப்பது உள்ளிட்ட 40 சதவீத பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
மேம்பால பணிக்காக நான்கு இடங்களில் உயரமான லான்சர்கள் அமைக்கப்பட்டு, கான்கிரீட் காரிடார்கள் இணைக்கப்படுகிறது,வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு அனைத்து துறை சார்ந்த அனுமதி பெற்று அடுத்த ஆண்டு முதல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விரைவான பயணம்
சென்னையில் உள்ள அண்ணா சாலை இருப்பது போல, கோவை மாநகரில் அவிநாசி சாலை மேம்பாலம் திகழ உள்ளது.
இதன் மூலம், அவிநாசி,திருப்பூர், ஈரோடு, சேலம் சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.
கோவை நகரின் பகுதிகளிலிருந்து விமான நிலையத்திற்கு வேகமாக செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
நீட்டிக்க கோரிக்கை
அவிநாசி சாலை மேம்பாலம் முடியும் கோல்டு வின்ஸ் பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் நீலம்பூர்- கொச்சின் புறவழி சாலை வருகிறது.
இந்த ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு, தற்போது கட்டப்பட்டு வரும் அவிநாசி சாலை மேம்பாலத்தினை நீலம்பூர் வரை விரிவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால் இது சாத்தியம் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த மேம்பாலம் குறித்து திட்டமிட்ட அதிகாரிகள், நீலம்பூர் வரை விரிவுபடுத்துவது தொடர்பாக கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து பொதுமக்கள் தரப்பில் முன் வைக்கப்படுகிறார்கள்.
Leave a Reply