திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரி, இந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ் கூறியதாவது:
“வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என முருக பக்தர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி, தீபத்தூணில் தீபம் ஏற்றச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவை அப்போதைய திமுக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு முந்தைய அரசு மதிப்பளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, முந்தைய அரசின் அணுகுமுறையைப் பின்பற்றாமல், முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வரும் கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.



Leave a Reply