கோவை ஜெம் மருத்துவமனை குழுமத்தின் 25-வது ஆண்டு விழா!

Spread the love

ஜெம் மருத்துவமனை குழுமத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா, கோவை நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி. கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு வரவேற்றுப் பேசினார். ‘அறுவை சிகிச்சையின் விதிகளை மறுவரையறை செய்தல் – தமிழ்நாட்டிலிருந்து உலகம் வரை’ என்ற கருப்பொருளில் விழா நடந்தது.

விருந்தினராகப் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது:

மருத்துவம் நம் நாட்டுக்கு ஒரு வரப்பிரசாதம். இசை போலவே மருத்துவமும் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டும். மருத்துவத்தில் அடுத்த தலைமுறையை மருத்துவராக்குவது ஒரு சேவை மட்டுமல்ல, சமுதாயத்திற்கான அர்ப்பணிப்பு.

ஒவ்வொரு நிறுவனமும் ஒரு தனி மனிதனின் தொலைநோக்குப் பார்வையில் துவங்குகிறது. நவீன வசதிகளைச் செய்து வருகிறது ஜெம் மருத்துவமனை. எளிய தொடக்கத்திலிருந்து சர்வதேச அளவுக்கு ஜெம் மருத்துவமனை உயர்ந்துள்ளது வியக்கத்தக்க வளர்ச்சி. ஒழுக்கம், விடாமுயற்சி, புதுமை, பகிர்ந்து கொள்ளும் தன்மை ஆகியவை வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன. சாமானிய மக்களுக்கும் அதிநவீன சிகிச்சை என்பதே ஜெம் மருத்துவமனையின் அடிப்படைக் கொள்கை; அதன் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.

டாக்டர் பழனிவேலு, 1998-ல் உலகில் முதல் முறையாக லேப்ராஸ்கோபிக் சிகிச்சையை அறிமுகப்படுத்தி, பயிற்சி அளித்து, 400-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஸ்டான்போர்டு – எல்சேவியர் (Stanford-Elsevier) 2026 தரவரிசையில், உலகின் தலைசிறந்த இரண்டு விஞ்ஞானிகளில் ஒருவராகப் பழனிவேலு இடம் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது.

நாம் சாதிப்பது மட்டுமே சாதனை அல்ல; மற்றவர்களையும் சாதிக்கச் செய்வதே மிகப் பெரிய சாதனை. தனிநபரின் தொலைநோக்குப் பார்வை, ஒட்டுமொத்த குழுவின் ஒருங்கிணைந்த பலமாக உருவெடுக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ஜெம் மருத்துவமனையின் இணை இயக்குநர் டாக்டர் பிரவீன்ராஜ், மருத்துவமனையின் தொலைநோக்குப் பார்வை குறித்துப் பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ், நடிகர் சரத்குமார், தி இந்து நாளிதழ் என். ராம், டாக்டர் கந்தசாமி, கே.பி.ஆர். மில்ஸ் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர். ஜெம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செந்தில்நாதன் நன்றி தெரிவித்தார்.