மருதமலையில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

Spread the love
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வை தரிசித்தனர். இந்த நிகழ்வில் அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில், முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. சஷ்டி விரதம் மேற்கொண்ட ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலுக்குப் படிக்கட்டுகள் வழியாகச் சென்று நிகழ்வைக் கண்டு வழிபட்டனர்.

பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், சூரசம்ஹாரம் மற்றும் மறுநாள் நடைபெற உள்ள திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு பக்தர்களின் சொந்த வாகனங்கள் மலைக்கோவிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காகக் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும், பாதுகாப்புப் பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டிகள் மற்றும் தற்காலிகக் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவில் நிர்வாகிகளுடன் இணைந்து சூரசம்ஹார நிகழ்விலும் பங்கேற்று சூரனின் தலையை வதம் செய்யும் நிகழ்வை நடத்தினார்.

சூரசம்ஹாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *