உயிர்காக்கும் முதலுதவி பயிற்சி: கோவையில் 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி!

Spread the love

அகில இந்திய தீவிர சிகிச்சைக் கழகத்தின் (ISCCM) கோவை கிளை சார்பில், அடிப்படை உயிர்காக்கும் முதலுதவி (BLS) மற்றும் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அவினாசி சாலையில் உள்ள ஜென்னீஸ் ரெசிடென்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கோவையை முக்கிய மருத்துவ மையமாகவும், மருத்துவச் சுற்றுலா மையமாகவும் மேம்படுத்துவதில் ISCCM கோவை கிளையின் பங்களிப்பைப் பாராட்டினார். மேலும், அடிப்படை உயிர்காக்கும் பயிற்சியை அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ISCCM கோவை கிளைத் தலைவர் டாக்டர் கோபிநாதன், பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள், அதற்கான காரணங்கள் மற்றும் உடனடி சிகிச்சையின் அவசியம் குறித்து விளக்கினார். ராயல் கேர் மருத்துவமனையின் டாக்டர் லட்சுமிகாந்த் சரண், திடீர் மாரடைப்பு ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய நெஞ்சழுத்த முதலுதவி (COLS) முறையைச் செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.

இதில் கோவையின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 100 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் சுவாச சிகிச்சை நிபுணர்கள் பயிற்சி பொம்மைகள் மூலம் நெஞ்சழுத்தம் வழங்கும் முறையைப் பயிற்றுவித்தனர். அமைச்சர் சம்பத்குமாரும் நேரடியாக இந்தப் பயிற்சியில் பங்கேற்றுக் கற்றுக்கொண்டார்.

ISCCM கோவை கிளை கடந்த 1998-ஆம் ஆண்டு 30 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டு, தற்போது 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக வளர்ந்துள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

டாக்டர்கள் என். செல்வராஜன், விவேகானந்தன், எம்.என். சிவகுமார், செந்தில்நாதன், செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

உயிர்காக்கும் முதலுதவி முறைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *