திமுக கை வைக்காத இடமே இல்லை; தவறு நடந்த அனைத்து விவகாரங்களிலும் விசாரணை நடத்தப்படும்- அமைச்சர் நிர்மல் குமார்!

Spread the love

பள்ளிக் கல்வித்துறையில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு: “திமுக கை வைக்காத இடமே இல்லை; மக்கள் பணத்தைக் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளையடித்துள்ளனர். தவறு நடந்த அனைத்து விவகாரங்களிலும் விசாரணை நடத்தப்படும். பொதுமக்கள் தயங்காமல் முன்வந்து புகார் அளிக்கலாம்” – கல்வித்துறை விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!

“மின்மிகை மாநிலம் எனக் கூறியது தவறு; தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி 5,300 மெகாவாட் மட்டுமே. சோலார் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் கூறினார்.

பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர் நிர்மல் குமார், ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து விவகாரங்களிலும் முறையான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார்:

“பள்ளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒரு சான்றிதழுக்கு 400 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும், பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுமக்களின் பணம் கட்சி நிதி என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன; யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.”

கரூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் அமைச்சர் கேள்விகளை எழுப்பினார். செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் தொடர்புடையதாகக் கூறப்படும் விவகாரங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டது தொடர்பாக மற்றொரு கோப்பும் விசாரணையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எங்கெல்லாம் தவறுகள் நடைபெற்றுள்ளனவோ, அவை அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு விசாரிக்கப்படும் என்றார்.

கோவை அகிலன் விவகாரத்தில் அமைச்சரின் நிர்பந்தம் இருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் விசாரணை தெளிவாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். ஐ.ஜி. அறிக்கையில் விவரங்கள் தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தவறு செய்தவர்கள் மீது எவ்விதத் தலையீடுமின்றி விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் தாங்கள் தலையிட முடியாது என்றும் கூறினார்.

ஆதாரங்கள் உள்ள அனைத்து இடங்களிலும் அவற்றைச் சேகரித்து விசாரணை நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மின்சாரத் தட்டுப்பாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட இடத்தில் மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை, மின்கேபிள் தொடர்பான கோளாறால் ஏற்பட்டது என்று தெரிவித்தார். நகராட்சி எல்லைக்கு உட்பட்ட மீட்டர் வரை மின்சாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதற்குப் பின்னர் உள்ள மின்சாரக் கம்பியில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்ய நேரம் எடுத்துக்கொண்டதால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.

தலைமைச் செயலகத்திலும் இதுபோன்ற மின்சாரப் பிரச்சினை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், என்ன நடந்தது என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்ட பின்னரே கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

மேற்கூரை சோலார் (Rooftop Solar) மற்றும் வீடுகளுக்கான சோலார் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் வரை 85 ஆயிரம் மேற்கூரை சோலார் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சம் அமைப்புகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சோலார் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், 4,000 வீடுகளுக்கான ஒப்பந்தங்கள் வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்தார். நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.

சிறுமி காணாமல் போன விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போதைய நிலவரத்தைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் விலைக்கு வாங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சொந்த மின் உற்பத்தியின் அடிப்படையிலேயே ஒரு மாநிலத்தை மின்மிகை மாநிலம் என்று கூற முடியும் என்றார்.

கடந்த ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கூறப்பட்டது தவறான தகவல் எனத் தெரிவித்த அவர், தற்போது தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி சுமார் 5,300 மெகாவாட் மட்டுமே என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தின் மின் உற்பத்தித் திறனை அதிகரித்து மின்மிகை மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *