கோவை மாநகராட்சியில் கவுன்சிலர் காயத்ரி தர்ணா போராட்டம்!

Spread the love

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கின் முன்பு, மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், தனது வார்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காகத் தன்னைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளதாகக் கவுன்சிலர் காயத்ரி குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான தான், தனது வார்டு மக்களின் குறைகளை மாமன்றக் கூட்டத்தில் எடுத்துரைப்பது கடமை என்றார். மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காகத் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், தனது வார்டில் சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பாகப் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்தார். இப்பிரச்சினைகள் குறித்து மாநகராட்சி மேயரிடம் நேரில் தெரிவிக்க முயன்றும், தன்னைச் சந்திக்க மேயர் மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மக்களின் குறைகளை எடுத்துரைக்க உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்த காயத்ரி, தனது வார்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, மாமன்றக் கூட்ட அரங்கின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை மன்றத்தில் முன்வைத்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கவுன்சிலர் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், கோவை மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.