மதுரை திருப்பரங்குன்றம் மலைத் தீபத்தூணில் நீதிமன்றத் தீர்ப்பின்படி கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலனி அருகேயுள்ள டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய கிஷோர் குமார், அனைத்து மலைக்கோயில்களிலும் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படுவது வழக்கம் என்றும், திருப்பரங்குன்றத்தில் மட்டும் தீபம் ஏற்றக் கூடாது எனக் கூறுவது என்ன நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டும் முந்தைய திமுக அரசு அதைச் செயல்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தற்போதைய தவெக அரசும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்குப் பதிலாக, தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றிச் செயல்பட வேண்டும் என்றும், கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வருபவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



Leave a Reply