ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் சாலமன் பாப்பையாவுக்கு நினைவஞ்சலி பேச்சாளர்கள் புகழாரம்!

Spread the love

தமிழ் மேடைப் பேச்சுலகில் 65 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்துவமான முத்திரை பதித்த மறைந்த பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு, கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை உருமையை எளிமையாகவும் இனிமையாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்த சாலமன் பாப்பையாவின் நினைவுகளைப் போற்றும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் எம். கிருஷ்ணன், பேச்சாளர்கள் எஸ்.எஸ். ராஜா, பாரதி பாஸ்கர், ஹரி கோபாலன், நிரா நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாரதி பாஸ்கர்

சாலமன் பாப்பையாவுடனான தனது நினைவுகளை உருக்கமாகப் பகிர்ந்தார் பாரதி பாஸ்கர்.
“அரவணைக்கும் தந்தையாக இருந்தவர். அவரது மகள் தான் நான். அவர் எல்லோருக்கும் தந்தையாக இருந்தார்.

முதல் மேடையில் பேசும் ஒவ்வொருவருக்கும் அவர் தகப்பனாக இருந்தவர். என் போனில் இருந்து நடுவர் என்ற அவரது எண்ணைக்கூட என்னால் நீக்க மனம் ஒப்பவில்லை.

தவறுகளைச் சுட்டிக்காட்டித் தகப்பனாக இருந்தார். என்னை வளர்த்துவிட்டு அப்படியே விட்டுச் சென்றுள்ளார். அப்போது எப்படி அழாமல் இருக்க முடியும்?” என்றார் கண்ணீர் மல்க.

தன்னைப் போன்ற பல பேச்சாளர்களுக்கு வழிகாட்டியாகவும், தவறுகளைத் திருத்தி வளர்க்கும் தந்தையாகவும் இருந்ததை அவரது உரை வெளிப்படுத்தியது.

65 ஆண்டுகளுக்கும் மேலாக…

பேச்சாளர் ராஜா பேசும்போது, சாலமன் பாப்பையா தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பட்டிமன்றங்களில் பங்கேற்றுப் பேசியவர் என்றார்.

1961-ம் ஆண்டு திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளியில் தனது முதல் மேடைப் பேச்சைத் தொடங்கிய அவர், தனது இறுதிக்காலம் வரை தமிழ் மேடைகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார்.

கடந்த செப்டம்பர் 6-ம் தேதி மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார்.

பட்டிமன்றப் பேச்சுகள் மட்டுமின்றி, திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் சாலமன் பாப்பையா முக்கியப் பங்காற்றியதாக அவர் தெரிவித்தார். 1997-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் தினமும் ஒரு திருக்குறள் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, தொடர்ந்து 13 ஆண்டுகள் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியின் மூலம் திருக்குறள் கருத்துகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தார் என்று நினைவு கூர்ந்தார் ராஜா.

தமிழ் இலக்கியத்தையும் திருக்குறளையும் மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன், இளம் பேச்சாளர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கிய சாலமன் பாப்பையாவின் பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது.