அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும்!” – கோவையில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி!

Spread the love

கோவை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நடந்து முடிந்த இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் பணம் மற்றும் மதுபானம் கொடுத்து வாக்குகள் பெறப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும், கடந்த பொதுத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அதிமுக தனது அரசியல் நிலைப்பாடு குறித்து சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் நீட் தேர்வு, காவிரி நீர்ப் பிரச்சினை, இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருப்பதாகக் சுட்டிக்காட்டிய அவர், அடுத்த நான்கு மாதங்களில் தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார். மேட்டூர் அணையில் தற்போது 30 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும், கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அரிசி விலையும் உயர்ந்துள்ளதால் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

செவிலியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், குரூப் 4 தேர்வு மூலம் 15 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தேர்தல் ஆணையர் தொடர்பான விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, தவறு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். மேலும், கடந்த காலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், இவ்வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய அவர், இதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என்றார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிர்வாக ரீதியான அனுபவம் குறைவாக இருந்தாலும், ஏற்கெனவே பணியில் உள்ள அரசு அதிகாரிகள் தொடர்ந்து இயங்கி வருவதால், பெரிய அளவில் நிர்வாகத் தடைகள் இருக்காது எனத் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகளை முழுமையாக மதித்துச் செயல்பட வேண்டும் என்றார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்குக் கிடைக்கும் நீரின் அளவு கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், விவசாயிகள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதிமுக – பாமக கூட்டணி குறித்த சமூக வலைதள வதந்திகளுக்குப் பதிலளித்த அவர், தற்போது பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்வதாகத் தெளிவுபடுத்தினார். தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, அது முற்றிலும் வதந்தியே தவிர வேறில்லை என்றும், தாங்கள் எந்தவித அமைச்சர் பதவிகளையும் யாரிடமும் கேட்கவில்லை, கேட்கப் போவதும் இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, “அரசியலில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” எனப் பதிலளித்தார்.