தென் இந்தியாவின் முதல் சினிமா தியேட்டரான கோவை மக்களிடமிருந்து விடைபெற்ற 110 வருடம் கடந்த ‘டிலைட்’ தியேட்டர் இடிக்கும் பணி நடந்து வருகிறது. தியேட்டர் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சினிமாவை தமிழ்நாடு போல் கொண்டாடிய மாநிலங்கள் எதுவும் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சினிமா மீது தமிழ் ரசிகர்கள் காதல் கொள்ள முக்கிய காரணமும் இருக்கிறது. இந்தியாவில் சினிமா நுழைந்த காலத்தில், தென் இந்தியாவில் உள்ள கோவையில் தான் அதிக அளவில் ஸ்டூடியோ, தியேட்டர்கள் அமைந்திருந்தன. மேலும் தென் இந்தியாவிலேயே முதன்முறையாக கோயம்புத்தூரில் தான் 1914-ம் ஆண்டு தியேட்டர் கட்டப்பட்டது. ‘டிலைட்’ என்று பெயரிடப்பட்ட அந்த தியேட்டரை சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் கட்டினார்.
திருச்சியைச் சேர்ந்த ரெயில்வே ஊழியராக இருந்த சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்காரரான டூ பாண்ட்டுவிடம் ஊமை படங்களை விலைக்கு வாங்கி கோவை தியேட்டரில் காட்சிப்படுத்தி வந்தார். பின்னர், அவர் படங்களை பொதுமக்களுக்கு காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தி வந்தார். துணிகளை கட்டி டென்ட் சினிமா கொட்டகையும் அமைத்தார். காலியிடங்களில் கூடாரம் அமைத்து சினிமாவை திரையிட்டார். அந்த காலத்தில் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் டென்ட் சினிமா உலகம் முழுவதும் பிரபலமாகி இருந்தது.
மக்களிடையே வரவேற்பு அதிகமாக இருந்த காரணத்தால், சாமிக்கண்ணு வின்சென்ட் கடந்த 1914-ல் நிரந்தர தியேட்டர் ஒன்றை கோவையில் உருவாக்கினார். அந்த தியேட்டர் பெயர் வெரைட்டிஹால் திரையரங்கம். அது தற்போது டிலைட் தியேட்டர் என அழைக்கப்படுகிறது. இந்த தியேட்டரில் முதன்முதலில் வள்ளி திருமணம் படம் திரையிடப்பட்டிருக்கிறது. அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் உள்பட பல்வேறு நடிகர்களின் படங்கள் அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது. 110 ஆண்டுகளை கடந்த டிலைட் தியேட்டரில் கடந்த பல வருடங்களாக பழைய படங்களே திரையிடப்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு டிலைட் தியேட்டர் புதுப்பிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து படங்கள் திரையிடப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின் டிலைட் தியேட்டரில் படங்கள் திரையிடப்படவில்லை.
110 ஆண்டுகள் கடந்து இயங்கி வந்த டிலைட் தியேட்டரின் உண்மையான பெயரான வெரைட்டிஹால் தான், இந்த தியேட்டர் உள்ள சாலையின் பெயராகவும் உள்ளது. இந்த டிலைட் தியேட்டர் தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் என அழைக்கிறார்கள். இந்நிலையில் போதிய வருமானம் இல்லாததால், பராமரிப்பு செய்யப்படவில்லை. இதனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த மற்றும் தென்னிந்தியாவின் முதல் தியேட்டரான டிலைட் தியேட்டரை இடிக்க உரிமையாளர்கள் முடிவு செய்தார்கள். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.
கோவை டிலைட் தியேட்டர் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரிய மால் போன்ற வணிக வளாகம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கோவை மக்களிடமிருந்து விடைபெற்ற 110 வருடம் கடந்த ‘டிலைட்’ தியேட்டர், அமைக்கப்படும் வணிக வளாகத்தில் தியேட்டரும் அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோளாக உள்ளது.
கோவை மக்களிடமிருந்து விடைபெற்றது 110 வருடம் கடந்த ‘டிலைட்’ தியேட்டர்



Leave a Reply