கோவை புட்டுவிக்கி சாலையில் கரும்புக்கடை காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சூலூரைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் மதுக்கரையைச் சேர்ந்த சந்தான்குமார் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1,448 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கைதான இருவரும் தேங்காய் உரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. சந்தான்குமார் மத்தியப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், மும்பையில் தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி கோவைக்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஒரு மாத்திரையை குறைந்த விலையில் வாங்கி, அதை பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சில மாத்திரைகள் போதை ஊசிகளாக மாற்றப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கடத்தல் மற்றும் விற்பனைச் சங்கிலியில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Leave a Reply