தமிழகத்தில் விமானம் வைத்திருந்த முதல் மருத்துவர்… ஆச்சரியத் தகவல்கள்!

Spread the love

தமிழ்நாட்டு மருத்துவ வரலாற்றில் பறக்கும் டாக்டர் என புகழ்பெற்றவர் சருக்கை.ரங்காச்சாரி. அப்போதைய சென்னை மாகாணத்தின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவர். அக்காலத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் சாலை வசதிகள் இல்லாத நிலையில் தொலை தூர இடங்களில் உள்ள நோயாளிகளை விரைந்து சென்று சிகிச்சை அளிக்க தனி விமானம்  வைத்திருந்தார். இதனால்,  பறக்கும் டாக்டர் என்ற பட்டப்பெயருக்கு சொந்தக்காரராகிப் போனார். ஏழை, பணக்காரர் பேதமின்றி பெரும்பாலும் கட்டணம் இல்லாமலும் மிக குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளித்தார்.  தினமும் 18 மணிநேரம் மக்களுக்காய் உழைத்ததால் அவர் மக்களின் மருத்துவராக கருதப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சருக்கை கிராமத்தில் 1882ம் ஆண்டு பிறந்த சீனிவாச ரெங்காச்சாரி கும்பகோணம் டவுண் உயர்நிலைப்பள்ளியிலும், பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும், சென்னை மருத்துவக் கல்லூரியிலும் பயின்றார். 1906 ம் ஆண்டு  அரசு உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் சேர்ந்தார். எழும்பூர், ஹைதராபாத், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், நாகபட்டிணம், பெரம்பலூர் ஆகிய இடங்களில் பணியாற்றினார். 1917ம் ஆண்டு  எழும்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியை வகித்த முதல் இந்தியர் இவரே .1922ம்  ஆண்டு அரசுப்பணியினை விட்டு கென்சிங்டன் நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையினை தொடங்கினார்.

ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காலம் என்பதால் சைக்கிள், பைக், கார் மூலம் சிகிச்சை அளித்த  டாக்டர். ரெங்காச்சாரி
டி ஹாவில்லாண்ட் பஸ் மோத் எனப்படும் 3 இருக்கைகள் கொண்ட விமானத்தை வாங்கினார். கர்ப்பிணிகளுக்கு அவசர சிகிச்சை, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இந்த விமானத்தை பயன்படுத்தினார். டைபாய்டு நோய்தொற்று பரவிய காலத்தில் பலரை காப்பாற்றினார். ஆனால்,  அதே டைபாய்டு தொற்றால் பாதிக்கப்பட்டு தனது 51 வயதில் 1934ம் ஆண்டு பரிதாபமாக இறந்து போனார்.

இவரது மருத்துவச் சேவையினை பாராட்டி மக்கள் இவருக்கு தங்கள் சொந்த செலவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பாக சிலை அமைத்தனர். இது சென்னையில் மருத்துவருக்கு என்று மக்களால் நிறுவப்பட்ட முதல் சிலையாகும். இதனை 1939ம் ஆண்டு அப்போதைய ஆளுனர் லார்ட் எர்ஸ்கின் திறந்து வைத்தார். இவரது தியாகம், புதுமையான அணுகுமுறை, மனிதநேயம் ஆகியவற்றால் தமிழக மக்கள் மனதில் இன்னும் மறையாமல் உள்ளார். இவரது நினைவைப் போற்றும் வகையில் மயிலாப்பூரில்  ஓர் சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தற்போது,  இச்சாலை டாக்டர்.ரெங்கா ரோடு என அழைக்கப்படுகிறது.

சுகாதாரத் துறையில் தன்னலம் கருதாமல் சேவையாற்றும் நபர்களுக்கு  டாக்டர். ரெங்காச்சாரி பெயரில் உயர்விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி பாடங்களில் இவரது வாழ்க்கை வரலாறு இடம் பெற வேண்டும்.  அவரின் கிளினிக் இருந்த பகுதியில் பறக்கும் டாக்டருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு கண்டு கொள்ளுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *