கோவையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், கல்வி, தொழிலாளர் நலன், விவசாயம் மற்றும் மாநில உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார்.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த வீரபாண்டியன், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்ற தலைவர்களில் நேரு முக்கியமானவர் என்றார். ஐந்தாண்டுத் திட்டங்கள், தொழில்துறை வளர்ச்சி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளுக்கான அடித்தளத்தை நேரு அமைத்ததாகக் குறிப்பிட்ட அவர், நேருவை விமர்சிப்பது வரலாற்றை மறுக்கும் செயலாகும் எனக் கூறினார்.
கல்வித்துறையைப் பற்றி பேசிய அவர், நீட் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ தொடர்பான முறைகேடுகள் மாணவர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். மாணவர்களின் போராட்டங்களில் நியாயம் இருப்பதாகக் கூறிய அவர், இந்த விவகாரங்களில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாய சங்கங்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசின் உரிமைகள் குறித்து கருத்து தெரிவித்த வீரபாண்டியன், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார். அது சலுகை அல்ல, மாநிலங்களின் அரசியல் மற்றும் அரசியலமைப்பு உரிமை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் உரை தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட வேண்டும் என்றும், தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கோவை மண்டலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஊடக சுதந்திரம் குறித்துப் பேசிய அவர், செய்தியாளர்கள் ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள் என்றும், அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
அரசியல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வீரபாண்டியன், “தற்போதைய நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மாநிலக் குழு கூடி, அப்போதைய அரசியல் சூழலை ஆய்வு செய்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) ஆகியவை அனைத்தும் ஜனநாயக சக்திகளே என்றும், கட்சி எப்போதும் மக்களின் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு தனது அரசியல் முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தவறு செய்யும் எந்த அரசியல் கட்சியையும் கம்யூனிஸ்டுகள் விமர்சிப்பார்கள் என்றும், மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் கூறினார்.
மேலும், புதிய அரசியல் தலைமைகள் தங்களை நிரூபித்துக் கொள்ள கால அவகாசம் தேவைப்படுகின்றது என்றும், மக்கள் நலன் மற்றும் ஜனநாயக மதிப்புகளை முன்னிறுத்தியே சிபிஐ தனது அரசியல் பயணத்தை தொடரும் என்றும் வீரபாண்டியன் தெரிவித்தார்.



Leave a Reply