டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டிடத்தில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கட்டிடத்தின் பல மாடிகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டன.
இரண்டாவது மாடியின் பின்புறத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அரவிந்த் (60), அவரது மனைவி அனிதா ஜெயின் (58), மகன் நிஷாந்த் ஜெயின் (35), மருமகள் அஞ்சல் ஜெயின் (33) மற்றும் 18 மாத குழந்தை ஆகாஷ் ஜெயின் ஆகியோர் உயிரிழந்தனர்.
முதல் மாடியில் நவீன் ஜெயினின் மனைவி ஷிகா ஜெயின் (45) உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மூன்றாவது மாடியில் வசித்து வந்த நிதின் ஜெயின் (50), அவரது மனைவி ஷெய்லி ஜெயின் (48) மற்றும் மகன் சம்யக் ஜெயின் (25) ஆகியோரும் தீ விபத்தில் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி வாசி ரோஹித் தெரிவித்ததாவது, ஏசியில் ஏற்பட்ட வெடிப்பே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறினார். மேலும், 12 முதல் 15 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் டெல்லி நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Leave a Reply