தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உச்சத்தை எட்டியிருந்த பூக்களின் விலை, தற்போது திடீரென சரிந்துள்ளது. வரத்து குறைவு மற்றும் விசேஷ நாட்கள் இல்லாத நிலை காரணமாக சந்தையில் பூக்களுக்கான தேவை குறைந்ததன் விளைவாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலை இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாலும், பூச்சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். உற்பத்திச் செலவுக்கே ஈடாகாத விலையில் பூக்களை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக முகூர்த்த நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் அதிக விலைக்கு விற்பனையாகும் பூக்கள், தற்போது மிகவும் குறைந்த விலையில் விற்பனையாகின்றன. குறிப்பாக மல்லிகைப் பூ, முன்பு ஒரு கிலோ ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விற்பனையாகிய நிலையில், இன்று ரூ.300-க்கு சரிந்துள்ளது. இது 80 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியாகும்.
அதேபோல், சம்பங்கி ஒரு கிலோ ரூ.300-இல் இருந்து ரூ.30-க்கு சரிந்துள்ளது. முல்லைப் பூ ரூ.400 முதல் ரூ.600 வரை இருந்த விலை தற்போது ரூ.100-ஆக குறைந்துள்ளது. பட்டன் ரோஸ் ரூ.250-இல் இருந்து ரூ.100-க்கும், ஜாதிப்பூ ரூ.400-இல் இருந்து ரூ.250-க்கும் விற்பனையாகி வருகிறது.
இந்த திடீர் விலை சரிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. தற்போது திருமணம், சுபமுகூர்த்தம், விழாக்கள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லாததால் பூக்களுக்கான தேவை குறைந்துள்ளது. மேலும், கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய நீர் வசதி இல்லாததால் மலர் செடிகளில் பூக்கள் பூப்பதும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வரத்து குறைந்திருந்தாலும், வாங்குபவர்கள் இல்லாத காரணத்தால் கிடைக்கும் பூக்களையே குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
“பூக்களைப் பறிப்பதற்கான கூலி, சந்தைக்குக் கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு கூட தற்போதைய விலையில் கிடைக்கவில்லை. குறிப்பாக சம்பங்கி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்படுவது எங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இருப்பினும், வரும் நாட்களில் கோடைத் திருவிழாக்கள் மற்றும் கோயில் திருவிழாக்கள் தொடங்க உள்ளதால், மே மாதத்தின் முதல் வாரத்தில் பூக்களின் விலை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக பூச்சந்தை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



Leave a Reply