கோவை வடக்கில் வானதி சீனிவாசனை ஆதிரித்து அண்ணாமலை நாளை சூறாவளிப் பிரச்சாரம்

Spread the love

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நடைபெற்ற தீவிர தேர்தல் பிரச்சாரப் பணிகளால் ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக, மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக வானதி சீனிவாசன் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொகுதி முழுவதும் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக அவருடைய காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடல்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த 48 நேரம் முழுமையான ஓய்வு அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, வானதி சீனிவாசன் ஓய்வில் இருக்கும் காலத்தில் தேர்தல் பிரச்சாரப் பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக, தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
வானதி சீனிவாசனை ஆதரித்து நடைபெறும் அண்ணாமலையின் தேர்தல் பரப்புரை நாளை காலை ஒன்பது மணிக்கு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகில் தொடங்குகிறது. தனது ‘சகோதரி’ வானதி சீனிவாசனுக்காக அண்ணாமலை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் சாலையில் தொடங்கும் இந்தப் பிரச்சார பயணத்தில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
காலில் ஏற்பட்ட வீக்கம் குணமடைந்தவுடன், வானதி சீனிவாசன் மீண்டும் தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *