சாதிவாரி கணக்கெடுப்பு கோரி கோவையில் தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டம்

Spread the love

தமிழ்நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும், மேலும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பதாகைகள் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பத், சமூகநீதி அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டுமெனில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கலாச்சாரம் பரவிவருவதாகவும் குற்றம்சாட்டி அதனை கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கூறினார்.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அதுகுறித்து கட்சித் தலைவர் விரைவில் அறிக்கை வெளியிடுவார் என தெரிவித்தார். இலவச திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, மக்களுக்கு பயனளிக்கும் எந்த திட்டத்தையும் கட்சி எதிர்க்கவில்லை என்றும், அதை “ஓசி” என இழிவாக பேசுவதை தான் கட்சி கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும், ஆனால் கூட்டணி குறித்த இறுதி முடிவை கட்சித் தலைவர் மட்டுமே அறிவிப்பார் என்றும் சம்பத் தெரிவித்தார்.