கோவை தடாகம் சாலையில், கேஎன்ஜி புதூர் பகுதியில் கோ கேஸ் நிறுவனத்திற்க்கு சொந்தமான பங்க் இயங்கி வருகிறது. இங்கு, ஆயிரக்கணக்கான டேக்ஸி ஒட்டுநர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் இங்கு தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி வருகின்றனர். தற்போது, வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, தமிழகத்தில் சிலிண்டர் எரிவாயு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த கேஸ் நிறுவனம் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், விலையை உயர்த்தியுள்ளனர். மற்ற பங்க்குகளில் இன்றைக்கும் ஆட்டோ எல்பிஜி ஒரு லிட்டர் விலை 64.87-க்கு விற்பனையாகும் நிலையில் இங்கு மட்டும் 84.99 க்கு விற்பனை செய்யப்பகிறது. மற்ற பங்க்குகளை விட 20 ரூபாய்க்கும் மேல் லிட்டருக்கு கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் ஊழியர்களிடம் கேட்ட போது, இஸ்டம் இருந்தால் அடியுங்கள், இல்லைஎன்றால் வெளியே செல்லுங்கள் என அலட்சியமாக கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கால் டாக்ஸி ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் கேஸ் பங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூறியதாவது, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரே நாளில் 20 ரூபாய்க்கு மேல் விலையை உயர்த்தியுள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினால் எந்தவித முறையான பதிலும் இல்லை . விலை உயர்வுக்கான அறிவிப்பு பலகையையும் எங்கும் வைக்கவில்லை. எனவே தமிழக அரசு உடன் உரிய நடவடிக்கை எடுத்து கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.



Leave a Reply