மோடி அரசின் மகளிர்தினப் பரிசு சிலிண்டர் விலையை உயர்வு தான் கி.வீரமணி விமர்சனம்

Spread the love

கோவை வ.உ.சி மைதானத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் உருவச்சிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தந்தை பெரியாரின் நெருங்கிய நண்பரான ஜி.டி. நாயுடுவின் பெருமையை அங்கீகரிக்கும் வகையில் இந்த அரசு ஜி.டி. நாயுடு மேம்பாலத்தையும் திறந்து வைத்து, தற்போது அவரது சிலையையும் அமைத்துள்ளதாக கூறி முதலமைச்சருக்கும் திராவிட மாடல் அரசுக்கும் நன்றி தெரிவித்தார். தமிழ் அறிஞர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் இந்த ஆட்சி வரலாற்று பணிகளை செய்து வருவதால் மீண்டும் இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகமே ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் பாஜக கூட்டணியில் சேருவார் என கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, கொள்கை பிடிப்பு இல்லாதவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது என்று விமர்சித்தார். தனது திரைப்படத்திற்கு பிரச்சனை ஏற்பட்ட போதும் மௌனம் காக்கும் விஜய், திமுகவை மட்டும் விமர்சித்து வருவதாகவும் பாஜக குறித்து எந்த விமர்சனமும் செய்வதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் வருமானவரி துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளின் மிரட்டல்களுக்கு அஞ்சியே விஜய் பாஜகவின் பி-டீம் போல செயல்படுகிறார் என்றும் கூறினார்.

மகளிர் தினப் பரிசாக ஒன்றிய மோடி அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியதாகவும், வெளியுறவுத்துறை கொள்கை தோல்வியடைந்ததால் பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஒரு நாடு என்ன வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா போன்ற நாடுகள் தீர்மானிப்பது நாட்டின் சுதந்திரத்திற்கே ஆபத்தானது என்றும் தெரிவித்தார்.

மேலும் ஜி.டி. நாயுடு பெயரில் உள்ள சாதி அடையாளம் குறித்த சர்ச்சை குறித்து விளக்கமளித்த அவர், கோபால்சாமி துரைசாமி நாயுடு என்பது அவரது பெயரின் ஒரு பகுதியாகவே உள்ளதன்றி அதை சாதி கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதுபோன்ற விஷயங்களில் விஷமத்தனம் தேட தேவையில்லை என்றும் கூறினார்.