கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவு அருந்திய போது உணவில் பல்லி இருப்பதாக தெரியவந்ததால் 44 மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
4, 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் பயிலும் 31 மாணவர்கள் மற்றும் 13 மாணவியர்கள் என மொத்தம் 44 பேர் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட போது உணவில் பல்லி இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மாணவ, மாணவியர்கள் கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை கோவை மாநகராட்சி மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சரவண பிரியா, மாநகர் நல அலுவலர் டாக்டர் மோகன், மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், உதவி ஆணையர்கள் கணேசன் மற்றும் நர்மதா, மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன் மற்றும் வீரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



Leave a Reply