கோவை வ.உ.சி மைதானத்தில் ஜி.டி. நாயுடு சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

Spread the love

கோவை வ.உ.சி மைதானத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அறிவியல் மாமேதை ஜி.டி,நாயுடுவின் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது. மானியக் கோரிக்கை விவாதத்தின் போது தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், இயந்திரவியல் மற்றும் விவசாய ஆராய்ச்சிகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடுவிற்கு கோயம்புத்தூரில் ரூ.50 லட்சம் செலவில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி கோவை வ.உ.சி மைதானத்தில் சிலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சிலையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஜி.டி. நாயுடு குடும்பத்தினர், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.