டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மோதும் வாழ்வா சாவா போட்டியில் இன்று கொல்கத்தாவில் மோதுகின்றன. ஒரு வேளை மழை காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டால், யார் அரை இறுதிக்கு முன்னேறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் தென் ஆப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்த பிரிவில் இரண்டே போட்டிகள் எஞ்சியுள்ளன. தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே தகுதி பெற்றதால், ஜிம்பாப்வே உடனான அந்த அணியின் ஆட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. அடுத்ததாக, கொல்கத்தாவில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் மோதுகின்றன.இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா இரண்டு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளதால், யார் வெல்கிறார்களோ , அந்த அணி நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும். மாற்று நாள் இல்லாததால், மழை போன்ற காரணங்களால் போட்டி கைவிடப்பட்டால், புள்ளிகள் இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.அப்படி நடக்கும் பட்சத்தில், மேற்கிந்திய தீவுகள் (+1.791) சிறந்த நிகர ஓட்ட விகிதத்தால் அரை இறுதிக்குச் செல்லும். இந்தியாவின் ரன் ரேட் -0.100 என்ற அளவில் உள்ளதால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெளியேற்றப்படும். எனவே இந்தியா இந்தப் போட்டியில் வெல்வது கட்டாயம். இன்று கொல்கத்தாவில் மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Leave a Reply