சடலத்தின் மேல் சடலம் புதைப்பு ; கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

Spread the love

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் ஒரு சடலத்தின் மேல் மற்றொரு சடலத்தைப் புதைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சொலவம்பாளையம் கிராமத்தில் சுமார் 84 சென்ட் பரப்பளவில் ‘அரிஜன மயானம்’ அமைந்து உள்ளது. இந்த மயானத்தை சொலவம்பாளையம், எம்.ஜி.ஆர் நகர், அண்ணா நகர் மற்றும் சிக்கலாம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  தற்போது, மயானத்தின் பரப்பளவு சுருங்கி வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்பு மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒருவர் உயிரிழந்தால் அவரது உடலை புதைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஏற்கனவே புதைக்கப்பட்ட சடலங்களுக்கு மேலே மற்றொரு சடலத்தைப் புதைக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது உயிரிழந்தவர்களின் கண்ணியத்தைச் சிதைப்பதாகப் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மயானத்தை பாதுகாக்க கோரி நேரில் மனு அளித்தனர்.