மோட்டார் வாகன அபராதம் என்ற பெயரில் போலியான செயலியை அனுப்பி, 71 வயது முதியவரின் மொபைலை ஹேக் செய்து ₹16.49 லட்சம் பணத்தை திருடிய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் சந்திரபோஸ் (71) என்பவருக்கு கடந்த செப்டம்பரில் வாட்ஸ்அப்பில் வாகன அபராதம் செலுத்துமாறு ஒரு லிங்குடன் apk செயலி வந்தது. அதை பதிவிறக்கம் செய்ததும் அவரது மொபைல் கட்டுப்பாடு மர்ம நபர்களிடம் சென்றது. பின்னர் வந்த OTP-களை பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் 12 தவணைகளாக திருடப்பட்டது.
புகார் கிடைத்ததும் மாநகர ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில் ஆய்வாளர் அழகுராஜா தலைமையில் விசாரிக்கும் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் பணம் பல கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றப்பட்டதும், குற்றவாளிகள் சூரத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
அதன்பேரில் சூரத்தில் பத்லியா ரஜ்னிபாய் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ₹3.50 லட்சம் பணம், 311 கிரெடிட்/டெபிட் கார்டுகள், 10 மொபைல் போன்கள், பைப்பிங் மிஷின், காசோலைப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வங்கிக் கணக்கில் இருந்த ₹6.39 லட்சம் முடக்கப்பட்டது.
மொபைல் ஹேக்கிங் மூலம் மோசடி செய்த குஜராத் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் சைபர் பாதுகாப்பு குறித்து மத்தியில் எச்சரிக்கை எழுப்பியுள்ளது.



Leave a Reply