அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: முதலமைச்சர் உத்தரவு

Spread the love

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் முக்கிய அம்சமாக, மாநில அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போது பெற்ற கடைசி மாத ஊதியத்தின் ஐம்பது சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்காக, பணியாளர்களின் பத்து சதவீத பங்களிப்புடன், ஓய்வூதிய நிதியத்திற்கு தேவையான கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு, அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வுக்கு இணையாக, ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை உயர்வு வழங்கப்படும். ஓய்வூதியதாரர் உயிரிழந்தால், அவர் பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தின் அறுபது சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

மேலும், அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் உயிரிழக்கும் போதும், அவரவர் பணிக்காலத்திற்கேற்ப அதிகபட்சமாக இருபத்தைந்து இலட்சம் ரூபாய் வரை பணிக்கொடை வழங்கப்படும். புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஓய்வூதியம் பெற தேவையான தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறும் அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.