கோவையில் ஆசிரியர் வீட்டில் தொடர் நகை திருட்டு: கள்ளச் சாவி பயன்படுத்திய நபர் கைது

Spread the love

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்டின். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை நாள் என்பதால், குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 10 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜெபா மார்டின் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

காவல்துறை விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் தற்போது கோவை சங்கனூர் கண்ணப்பன் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை நோட்டம் விட்டு, வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்ற நேரத்தை கண்காணித்து, கள்ளச் சாவி பயன்படுத்தி வீடுகளுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளச் சாவியை பயன்படுத்தி கதவுகளை திறந்து, பீரோ லாக்கர்களை உடைக்காமல் திறந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி, கைரேகைகள் பதியாதவாறு துணிகளால் தடயங்களை துடைத்து அழித்து வந்ததும் தெரியவந்துள்ளது. திருடிய நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று, அதனை தனது குடும்ப செலவுகளுக்காக பயன்படுத்தி வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு சாய்பாபா காலனியில் இருந்து பம்பாய்க்கு சென்று ஹோட்டலில் சர்வர் வேலை செய்து வந்ததாகவும், பம்பாய் ரயில் நிலையத்தில் சூட்கேஸ் திருடிய வழக்கில் சிறைக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் தங்க நகை திருடிய வழக்கிலும், திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் சூட்கேஸ் திருடிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பதிவுகள் உள்ளன.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, கோவைக்கு வந்து டிரைவிங் வேலை செய்து கொண்டிருந்த இவர், காரமடை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு மீண்டும் சிறைக்கு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது, குனியமுத்தூரில் ஜெபா மார்டின் வீட்டில் கள்ளச் சாவி பயன்படுத்தி 104 பவுன் தங்க நகைகளை நூதனமாக திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் மீது வேறு பகுதிகளில் மேலும் திருட்டு வழக்குகள் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.