​​கோவையில் இந்து வியாபாரிகள் மாநாடு: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசை விமர்சித்த இந்து முன்னணி

Spread the love

கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில நிர்வாகி காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்து வியாபாரிகள் சங்கம் வியாபாரிகள் மத்தியில் ஒற்றுமையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். நாட்டின் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், பொருளாதார முன்னேற்றத்திற்கு வியாபார வளர்ச்சி அவசியம் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த சங்கம் தொடங்கப்பட்டதாக கூறினார்.

வியாபார வளர்ச்சி குறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 4-ஆம் தேதி கோவையில் இந்து வியாபாரிகள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அவர் அறிவித்தார். நாடு வல்லரசாக மாற இந்து வியாபாரிகள் சங்கம் முக்கிய பங்காற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய காடேஸ்வரா சுப்ரமணியம், தி.மு.க அரசு இந்துக்கள் விரோதமாகவும், கடவுள் நம்பிக்கை அற்ற அரசாகவும் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம் முருகன் மலை என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், உயர்நீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டும் அதனை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என அவர் கூறினார். மத்திய காவல் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்ட போதும், அதையும் அரசு செயல்படுத்தவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.

மேலும், சந்தனக்கூடு மற்றும் கொடிக் கம்பம் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவை காரணமாகக் காட்டி பக்தர்களுக்கு மலை மீது செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த போராட்டத்தின் போது பூரண சந்திரன் உயிர் தியாகம் செய்ததாக கூறிய அவர், அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், நீதிமன்றத்தை கேலிக் கூத்தாக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

திருப்பரங்குன்றத்திற்கு மாமிசம் மற்றும் பிரியாணி கொண்டு செல்ல முயன்றதை மக்கள் எதிர்த்ததால் போலீசார் தடுத்ததாகவும், அதன் பின்னர் தி.மு.க வினர் நாடகமாடுவதாகவும் அவர் கூறினார். சிக்கந்தர் தர்கா என கூறப்படும் இடத்தில் கோவில் தூண் இருப்பதாகவும், அந்த கல்லில் ஹனுமான் படம் உள்ளதாகவும், தீபம் ஏற்றுவதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.