பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கட்சியில் இருந்து நீக்கம் – அன்புமணி ராமதாஸ் உத்தரவு

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஜி.கே. மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் அமைப்பு விதி 30&ன் கீழ், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, “பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஏன் நீக்கக் கூடாது?” என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு, பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு சார்பில் கடந்த 18.12.2025 அன்று ஜி.கே. மணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த நோட்டீஸுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கட்சியின் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் எதிராக செயல்பட்டதாகக் கருதி, ஜி.கே. மணியை பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, பாமக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தற்போதைய தலைமை இடையிலான கருத்து வேறுபாடுகள் மீண்டும் வெளிப்படையாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.