திருப்பூரில் குப்பை கொட்ட எதிர்ப்பு போராட்டம் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது

Spread the love

திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை சின்னகாளிபாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகாளிபாளையம் பகுதியில், மாநகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் குப்பை லாரிகளை சிறைப்பிடித்ததாகக் கூறி சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார். ஆனால், காவல்துறை அனுமதி வழங்காததால், அவர் காரிலிருந்தபடியே கருத்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அனுமதி இன்றி போராட்டம் நடத்த முயன்றதாகக் கூறி, அண்ணாமலையை காவல்துறையினர் கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அண்ணாமலை கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும், அப்பகுதியில் திரண்ட பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி கூடுதல் காவல் படையினர் குவிக்கப்பட்டனர்.

சின்னகாளிபாளையம் பகுதியில் குப்பை கொட்டும் விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலையீட்டால் விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது.