கோவையில் தவெக தலைவர் விஜய்க்கு வரவேற்பு அளித்த தொண்டர்கள்

Spread the love
​ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

விஜய் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. பயணிகள் அல்லாத தேவையற்ற கூட்டங்கள் விமான நிலையத்திற்குள் நுழையாமல் தடுக்கும் வகையில், காவல்துறையினர் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவிநாசி சாலையில் இருந்து விமான நிலைய சாலைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

அதேபோல், விமான நிலையத்தின் வருகை நுழைவு வாயிலில் தவெக தொண்டர்கள் திரண்டுகொள்வதற்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். கடந்த முறை விஜய் கோவை வந்தபோது, விமான நிலையத்தில் இருந்த ட்ராலிகள் மற்றும் தடுப்புகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதுகாப்பு கருதி, விமான நிலையம் அருகே உள்ள ஒய் சந்திப்பு பகுதியில் மட்டுமே தவெக தொண்டர்கள் நிற்க அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே, கோவை விமான நிலையம் வந்த விஜயை அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் விஜயமங்கலம் நோக்கி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக தனியார் விடுதியில் ஓய்வெடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், விமானம் தாமதமாக வந்ததால் நேரடியாக விஜயமங்கலத்திற்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.