தமிழக வெற்றி கழக மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தெரிவித்த விமர்சனங்களுக்கு, அண்ணாமலை கடுமையாக பதிலளித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ், “எங்கள் தலைவர் விஜய் கூறிய வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ, அண்ணாமலைக்கு பொருந்தும். அவர் அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால், அவர் இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார்” என கூறி, அண்ணாமலையை விமர்சித்தார். மேலும், தலைவர் எப்போது பேச வேண்டும் என்பதை அவரே அறிவார் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, தன்னை விமர்சிப்பவர்களுக்கு கடுமையான வார்த்தைகளில் பதிலளித்தார். “நான் உண்மையை பேசுகிறவன். யாருக்கும் ஜால்ரா அடிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. உன்னதமான கோட்பாடுகளுக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன். இதன் காரணமாக எதிர்காலத்தில் பிரச்சனைகள் வரும் என்பதையும் நான் அறிவேன், அதனை சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
மேலும், பதவி, அதிகாரம் ஆகியவற்றிற்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும், அதுபோன்ற பதவி எனக்கு தேவையில்லை என்றும் அண்ணாமலை கூறினார்.
இரு தரப்பினரின் கடும் கருத்துப் பரிமாற்றம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply